Tamil News
Tamil News
Wednesday, 15 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

எம்.பி. திருச்சி சிவா-கே.என்.நேரு ஆதரவாளர்களிடையே இடையே ஏற்பட்ட மோதல், காவல் நிலையத்தை தாக்கியது, பள்ளத்தூர் பெட்ரோல் வெடிகுண்டு சம்பவம், மற்றும் அரக்கோணத்தில் மாமூல் கேட்டு அச்சுறுத்தி வந்ததால் கடையை உரிமையாளர் காலவரையன்றி மூடியது என மேற்குறிப்பிட்ட சம்பவங்களைக் குறிப்பிட்டு தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடக்கிறதா இல்லை ஜார் மன்னராட்சி நடக்கிறதா என்று கேள்வி எழுப்பி, இதை கட்டுப்படுத்தவில்லையென்றால் இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டெழுவார்கள் என்று திமுக அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தை ஆட்சி செய்யும்போதெல்லாம் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது.
காவல் துறையில் அரசியல் குறுக்கீடு இல்லை; ஜாதி, மத மோதல்கள் இல்லை; அதிகாரிகள் மிரட்டப்படுவது இல்லை; எனவே, சாதாரண முட்டுச் சந்து முதல், வெளிநாட்டு முதலீட்டுடன் வியாபாரம் செய்யும் அனைத்து தொழில் முனைவோர்களும் எந்தவித அச்சமுமின்றி தங்கள் தொழிலை செய்து வந்தனர். பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த முதல் பெருநகரம் என்ற பெருமையை சென்னையும், மற்ற இடங்களை தமிழகத்தின் இதர நகரங்களும் பெற்றன. 

மக்கள் ஆட்சியா? ஜார் மன்னன் ஆட்சியா?

விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், தமிழகத்தில் தற்போது நடப்பது மக்கள் ஆட்சியா? ஜார் மன்னன் ஆட்சியா? என்று தெரியாத அளவுக்கு அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளால் அனைவரும் உரைந்து போயுள்ளனர். ஆளும் திமுக-வினரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

காவல் துறையை தன் கைவசம் வைத்துள்ள இந்த விடியா அரசின் முதலமைச்சர், காவல் நிலையத்தைத் தாக்கியவர்களை அடக்கி ஒடுக்காமல், கட்சியிலிருந்து சஸ்பெண்ட் என்ற கண்துடைப்பு நாடகத்தை நடத்தியது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டெழுவார்கள்

இந்த விடியா திமுக அரசில் ஒவ்வொரு செயல்பாடும் புரியாத மர்மமாக உள்ளது. தலைமையின் கட்டுப்பாட்டில் கட்சியினர் இல்லை. ஆட்சியாளரின் கட்டுப்பாட்டில் அதிகார வர்க்கம் இல்லை. அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் அரசு ஊழியர்கள் இல்லை. 

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல், ஆளும் திமுக நிர்வாகிகளின் அராஜகம் போன்றவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியினை நிலைநிறுத்த வேண்டும் என்று இந்த நிர்வாகத் திறனற்ற விடியா அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், இந்த ஆட்சியாளர்களால் தினமும் பாதிக்கப்படும் காவலர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆட்சிக்கு எதிராக திரண்டெழுவார்கள் என்பதை இந்த ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.