Tamil News
Tamil News
Thursday, 16 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சர்வதேச நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டும் என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு - கேரளா

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் எனக்கோரி கேரளாவைச் சேர்ந்த பல்வேறு தனிநபர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்கள். இதில் ஒரு இடையீட்டு மனுவாக கேரள அரசு மனுதாக்கல் செய்திருந்தது. 

அணையின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் தமிழ்நாடு கேரளா இரு மாநிலங்களுக்கிடையே மாறுபட்ட கருத்துகள் இருந்து வந்தது. அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தங்களுக்கு கேரள அரசு அனுமதி வழங்கவில்லை என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அணை உறுதியாக இருக்கிறது என்ற வாதத்தையும் தமிழக அரசு வைத்து வருகிறது. 

சர்வதேச நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டும்

இந்தநிலையில், முல்லை பெரியாறு அணை மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது என்ற வாதத்தை கேரள அரசு முன் வைத்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை ஆய்வு செய்யப்பட்டு 10 ஆண்டுகளை கடந்தநிலையில், தற்போது அணையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சர்வதேச நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, கேரள அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட விளக்க மனுவில்;

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும், சர்வதேச நிபுணர்கள் அடங்கிய சுதந்திர அமைப்பைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆய்வை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஆய்வின் போது தமிழ்நாடு, கேரள அரசு அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும் எனவும், ஆய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அணையின் உறுதி தன்மை கேள்விக்குறியானது

மேலும், முல்லை பெரியாறு அணை தொடர்பாக, கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள விளக்க மனு தாக்கலில், முல்லை பெரியாறு அணை பகுதி என்பது நிலநடுக்க பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாக இருக்கிறது என்றும், 2020-ம் ஆண்டு மார்ச்-12 முதல் நவம்பர் 17-ம் தேதி வரை 138 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. 

அணை 127 ஆண்டுகளுக்கு மேலானது என்பதால் அதன் உறுதி தன்மை என்பது கேள்விக்குறியானது. அணை பாதுகாப்பு சட்டம் 2021-ன் கீழ் வரும் வழிகாட்டு நெறிமுறைகள் படி அணையை ஆய்வு செய்ய வேண்டும். அணை உடைந்தால் இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உயிர் சேதம் ஏற்படும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.