Tamil News
Tamil News
Friday, 17 Mar 2023 00:00 am
Tamil News

Tamil News

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுக எம்.பி.திருச்சி சிவா ஆகிய இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

திருச்சி சிவா வீடு தாக்குதல்

தி.மு.க மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவாவின் வீட்டை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் ஆதரவாளர்கள் கடந்த 15ம் தேதி அன்று தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் திருச்சி சிவாவின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் மின் விளக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கட்சியில் இருந்து நீக்கம்

இந்நிலையில் அன்று மாலையே, திருச்சி மாவட்ட துணைச் செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், பொருளாளர் மற்றும் ஒரு வட்ட செயலாளர் என நான்கு பேரை கட்சி ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா

இந்நிலையில் நேற்று (17-03-2023) செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, “பஹ்ரைனில் 178 நாடுகள் பங்கேற்ற ஒரு மாநாட்டில் நாடாளுமன்றத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரு குழுவில் இருந்து பங்கேற்க சென்றிருந்தேன். இப்பொழுதுதான் திரும்பி வருகிறேன், நான் மிகுந்த களைப்பில் இருக்கிறேன். நடந்த செய்திகளை ஊடகங்கள் மற்றும்  சமூக ஊடகங்கள் மூலமும் அறிந்துகொண்டேன். இப்பொழுது நான் எதையும் பேசுகிற மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் நிறைய சோதனைகளை சந்தித்து இருக்கிறேன், நான் அடிப்படையில் ஒரு முழுமையான, அழுத்தமான கட்சிக்காரான். எனக்கு என்னைவிட என் கட்சி முக்கியம் என்ற காரணத்தால் பலவற்றை நான் பெரிதுபடுத்தியது இல்லை, யாரிடமும் சென்று புகார் கூறியதும் இல்லை. தனி மனிதனைவிட இயக்கம் பெரியது என்ற தத்துவத்தின் அடிப்படையில் வளர்ந்தவன், இருப்பவன். அப்படித்தான் இத்தனை நாட்களும் இருந்தேன். இப்பொழுது நடந்து இருக்கிற நிகழ்ச்சி மிகுந்த மன வேதனையை தந்திருக்கிறது. வீட்டில் உள்ள எனது உதவியாளர்களிடம் நான் பேச வேண்டும், நான் ஊரில் இல்லாதபோது அவர்கள் எல்லாரும் மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். என்னோடு இருந்த சில நண்பர்கள், 65 வயதானவர்கள் எல்லாம் காயப்பட்டு இருக்கிறார்கள். அதனால் இப்பொழுது நான் எதையும் பேசுகிற மனநிலையில் இல்லை. நான் பேசுவதற்கு நிறையா இருக்கிறது ஆனால் இப்பொழுது நான் பேசுகிற மனநிலையில் இல்லை. நான் மிகுந்த களைப்பில் இருக்கிறேன், மனச் சோர்விலும் இருக்கிறேன். மனச்சோர்வு என்கிற வார்த்தையே எனக்கு கிடையாது” எனக் கூறினார். பின்னர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றபோது “தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், எனக்கு சிறிது நேரம் தாருங்கள், நான் உங்களிடம் பேசுவதைவிட வேறு யாரிடம் சென்று பேசப்போகிறேன் நீங்கள் தான் எல்லாமே, நான் உங்களிடம் எல்லாமே சொல்கிறேன், மாலையில் உங்களை சந்திக்கிறேன்” எனக்கூறினார். 

திருச்சி சிவா - அமைச்சர் நேரு சந்திப்பு

இந்நிலையில், இன்று (17-03-2023) மாலை அமைச்சர் நேரு, திருச்சி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இதன்பின் பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, “கழக குடும்பத்தில் நடக்க கூடாத விஷயம் நடந்து விட்டது. எனக்கு இந்த விஷயம் தெரியாது. சிவா வெளிநாட்டில் இருப்பதாக சொன்னார்கள். நீங்கள் இருவருமே திருச்சியில் கழகத்தை கட்டிக்காத்து வருபவர்கள். உங்களுக்குள் இதுபோன்ற எந்த பிரச்னையும் இருக்க கூடாது என்று முதல்வர் பேசி சமாதானம் செய்து விட்டு, நாட்டு மக்களுக்கு ஒற்றுமையை தெரிவித்து விட்டு வா என்றார். முதல்வர் கேட்டபோது, நான் அப்படி செய்வேனா என்று கூறினேன். பின்னர் இங்கு வந்து நாங்கள் இருவரும்மனம் விட்டு பேசினோம்” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 

இதுபற்றி திருச்சி சிவா கூறுகையில், “நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என்றார். மேலும் கழகத் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மனம் புண்படும்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அமைச்சர் நேரு என்னிடம் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார், அவருக்கு இதில் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறினார். நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன். எங்களைப் பொறுத்தவரை இயக்கத்தினுடைய வளர்ச்சி முக்கியம், மேலும் அவர் ஆற்றுகிற தொண்டினை என்னால் செய்ய முடியாது, அதைப்போல எனது பணிகளை அவரால் செய்ய முடியாது. ஆனால் நாங்கள் இருவரும் வேறு வேறு வழிகளில் கழகப் பணியை செய்துகொண்டிருக்கிறோம், தொடர்ந்து செய்வோம்” எனக் கூறினார்.