Tamil News
Tamil News
Friday, 17 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

திராவிடக் கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்கப் போவதில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தடாலடியாக பேசியிருப்பது அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

அதிமுக-பாஜக மோதல்

கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் சூழல் பரபரப்பாகவே இருந்து வருகிறது. ஆளும் கட்சி தொடர்பான செய்திகள் மக்கள் மத்தியில் சென்றடைவதைவிட, அதிமுக இரட்டைத்தலைமை விவகாரம், பாஜக ஹனிடிராப் அரசியல் மற்றும் அதிமுக-பாஜக கூட்டணி மோதல் என மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரங்களிலும் தினம்தினம் தலைப்புச் செய்தியாக இருந்து வருகிறது. ஈரோடு கிழக்குத் தேர்தல் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்ததையடுத்து, அதிமுக பாஜக கூட்டணி மோதல் தற்போது வரை பேசுபொருளாக இருந்து வருகிறது.

பாஜகவின் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவராக இருந்த சி.டி. நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததையடுத்து, அதிமுக-பாஜக கூட்டணி முறியத் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி கூட்டணி தர்மத்தை மீறிவிட்டார் என்று பாஜகவைச் சேர்ந்தவர்கள் எடப்பாடியின் உருவ பொம்மை எரிப்பு, அதிமுக எம்.எல்.ஏ.க்களை தூக்குவோம் என்று பேசியது என கூட்டணி முறிவதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல், அதிமுகவினரும் பாஜகவை விமர்சனம் செய்து வந்தனர்.

திராவிடக் கட்சிகளுடன் இணைய விரும்பவில்லை

இந்த சம்பவங்கள் குறித்து, எடப்பாடி பழனிசாமியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை அமைந்தகரையில் ஒரு அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளார். கூட்டத்தில் திராவிடக் கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்கப் போவதில்லை என்று தடாலடியாக பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், 

தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டு குனிந்து செல்ல விரும்பவில்லை என்றும், பாஜக-வை வலுப்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பேசினார். மேலும், கூட்டணிக்காக இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு யாருக்கும் சலாம் போட மாட்டேன் என்றும், மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். இது தொடர்பாக, பிரமரை சந்தித்து பேசுவேன் என்றும் பேசியிருக்கிறார்.

அதிமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஏற்கனவே அறிவுறுத்திய நிலையில், தற்போது திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.