Tamil News
Tamil News
Friday, 17 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

பொதுச்செயலாளர் தேர்தல் மனுதாக்கல்

நேற்றைய தினம் அதிமுகவின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதிமுக துணைப் பொதுச்செயலாளராகவும் தேர்தல் ஆணையாளராகவும் உள்ள நத்தம் விஸ்வநாதன் மற்றும் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும் தேர்தல் ஆணையாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

அந்த அறிவிப்பில், வேட்பு மனுத்தாக்கல் மார்ச்-18 காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் மார்ச்-19 பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். மார்ச் 20ஆம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. மார்ச் 21-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை மனுவைத் திரும்பப் பெறலாம். மார்ச் 26-ம் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரைநடைபெற உள்ளது. மார்ச் 27-ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறது.

இன்று காலை 10 மணி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், முதல் நாளான இன்றே எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தலுக்கான மனுதாக்கல் செய்தார்.

ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நிலைப்பாடு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முதலில் பேச தொடங்கிய ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் "அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது" என்று விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், 

பழனிசாமி திருந்தவில்லை

"தேர்தல் என்றால் முறையான உரிய கால அவகாசத்துடன் நடைபெற வேண்டும். அதிமுகவில் தேர்தல் நடத்துவதற்கு என சட்ட விதிகள் உள்ளன.
விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துவது, சட்ட விதிகளை மாற்றுவது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல் என்று பேசினார். ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவராக இருந்தவர் ஓபிஎஸ். அதிமுகவை காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.

அதிமுகவை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமியை குற்றம் சாட்டினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகும் எடப்பாடி பழனிசாமி திருந்தவில்லை. அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் மன வேதனையில் உள்ளனர்" என்று பேசினார்.

அதிமுகவை மீட்டெடுப்போம்

தொடர்ந்து பேசிய அவர், "ஜெயலலிதா, எம்ஜிஆர் வகுத்துக் கொடுத்த சட்ட விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அனைத்து முயற்சி எடுப்போம் என உறுதி பூண்டார். இனி இவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைத்தையும் விட்டுக்கொடுத்தோம். நமக்கான நேரம் வரும்போது, அதிமுகவை மீட்டெடுப்போம்" என்று பேசினார்.

மேலும், "மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். பின்னர், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அனுமதி வழங்கியது யார் என்று கேள்வி எழுப்பிய பண்ருட்டி ராமச்சந்திரன் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் இது குறித்து முறையிட உள்ளோம்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிக்பாக்கெட் அடிப்பதுபோல பொதுச்செயலாளர் தேர்தல் உள்ளது

அவரைத்தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் "அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்று பேசிய அவர், "பிக்பாக்கெட் அடித்து செல்வது போன்று பொதுச்செயலாளர் தேர்தல் உள்ளது" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

தண்ணீர் பாட்டிலை பார்த்தால் அலர்ஜியாக இருக்கிறது

"அதிமுக பொதுக்குழுவுக்கு பிறகு தண்ணீர் பாட்டிலை பார்த்தால் அலர்ஜியாக இருக்கிறது என்று கலகலப்பாக பேசினார். இபிஎஸ் அணி மீது அதிமுக தொண்டர்கள் நம்பிக்கை வைத்திருந்தால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னத்தை விட்டுக்கொடுத்தோம்" என்று பேசினார்.

"எங்களது பயணம் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இபிஎஸ் அணியிடமிருந்து அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களது நோக்கம். சர்வாதிகாரமாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளார் என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா இப்படித்தான் கட்சியை நடத்தினார்களா" என கேள்வி எழுப்பினார்.

எங்களை கட்சியைவிட்டு நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை

"ஈரோடு இடைத்தேர்தல் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானது. தமிழகத்தில் எங்கு சென்றாலும் இபிஎஸ்க்கு எதிர்ப்பலை பாயும். வழக்கு நிலுவையில் இருக்கும் போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசரம். கட்சியை விட்டு எங்களை நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை" என்று கடுமையாக சாடியிருக்கிறார்.

இறுதியாக, ஏப்ரல் 2-வது வாரத்தில் திருச்சியில் பெரிய மாநாடு நடத்தப்படும் என்றும் மாநாடு நடத்திய பிறகு மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.