Tamil News
Tamil News
Friday, 17 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடமிருந்தும் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஸ்வரா பாஸ்கர் திருமண வரவேற்பு

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் அவரது நீண்ட நாள் காதலரான ஃபகத் அகமதுவை சிறப்பு திருமணச் சட்டத்தின்படி கடந்த பிப்ரவரி மாதம் குடும்பத்தினர் முன்னிலையில் பதிவு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நேற்று (17-03-2023) அன்று கொல்கத்தாவில் பிரமாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல சினிமா பிரபலங்கள் மட்டும் இன்றி, அரசியல் பிரபலங்களும் கலந்துகொண்டனர். 

மமதா, அகிலேஷ் யாதவ் சந்திப்பு

ஸ்வரா பாஸ்கரின் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட அகிலேஷ் யாதவ், பின்னர் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்த்யோபதய், ராகுல் காந்தி, பாஜக குறித்து லண்டனில் கூறிய கருத்துக்களுக்காக நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. பாஜகவிற்கு நாடாளுமன்றத்தை செயல்படுத்த விருப்பமில்லை. மேலும் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளின் முகமாக இருப்பதையே பாஜக விருப்புகிறது, அது பாஜகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று கூறினார். மேலும் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளின் பிக்பாஸ் என்பது தவறான கருத்து எனவும் சுதிப் தெரிவித்தார். மேலும் அகிலேஷ் யாதவ்வை மமதா சந்தித்ததை தொடர்ந்து, வரும் மார்ச் 23ம் தேதி ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை மமதா சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது அணியை கட்டமைக்கவில்லை எனக்கூறிய அவர், காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் மாநில கட்சிகளின் துணையோடு பாஜகவை வீழ்த்த முடியும் என தெரிவித்தார். 

அகிலேஷ் யாதவ்

மமதா பானர்ஜியை சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், மேற்கு வங்கத்தில் நாங்கள் மமதா பானர்ஜியுடனே உள்ளோம் என தெரிவித்தார். மேலும் பாஜக மற்றும் காங்கிரசிடமிருந்து சமமான அளவில் விலகி இருக்க விரும்புவதாக தெரிவித்த அகிலேஷ், பாஜகவின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்கள், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரி சோதனைகள் குறித்து கவலைப்படுவதில்லை என தெரிவித்தார். 

வலுவிழக்கும் எதிர்க்கட்சிகள்

கடந்த மார்ச் ஒன்றாம் தேதி, சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பேசிய ஸ்டாலின், பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் எனவும் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை கட்டமைத்தால் அது பாஜகவிற்கு சாதகமாக அமையும் எனவும் தேசிய அளவில் கோரிக்கை வைத்தார். இந்த பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உத்தரபிரதேச எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர். திமுக மேடையில் காங்கிரசுடன் அகிலேஷ் யாதவ் அமர்ந்திருந்தார்.

ஆனால் இன்று மமதாவுடன் கைக்கோர்த்து காங்கிரசுக்கு எதிரான விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இதனால் 2024ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்து மீண்டும் பாஜக ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.