Tamil News
Tamil News
Sunday, 19 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சில நாட்கள் பேரவை நடைபெற்றது. இந்நிலையில், தமிழக அரசின் 2023-24 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.  

பட்ஜெட் வாசிக்க தொடங்கிய போது எதிர்க்கட்சியினர் கூச்சல், குழப்பமிட்டு அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். அவையைவிட்டு வெளியேறிய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளது. என்.எல்.சி. விரிவாக்கத்திற்கு விவசாய நிலத்தை பறிக்கும் செயலை கண்டித்தும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல் படுத்தாதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசில் மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். மின் கட்டணம், சொத்து வரி, பால் விலையை உயர்த்தியுள்ளனர். இது தான் திமுக அரசுக்கு மக்கள் அளிக்கும் பரிசு. அதிமுக ஆட்சிக்காலத்தில் தேவையான திட்டங்களை அறிவித்தோம். தேவையான நிதியை அறிவித்தோம். ஆனால் திமுக அரசு திட்டங்களை அறிவிக்கிறதே தவிர நிதியை ஒதுக்குவதில்லை.

நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட்ட உதயநிதிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும். மின்மினிப்பூச்சி, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராது, கானல் நீர் தாகம் தீர்க்காது. அதுபோல் தான் தமிழ்நாடு பட்ஜெட் உள்ளது என எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

தமிழக பட்ஜெட் 2023-2024 விடியா அரசின் விளம்பர பட்ஜெட். திமுக அரசு தாக்கல் செய்திருக்கும் 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டங்களும் இல்லாமல், மக்களுக்கு விடிவே இல்லாத நிலையை ஏற்படுத்தக் கூடிய அறிக்கையாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என ஏமாற்றியுள்ளனர்.

மேலும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம், டீசல் விலை குறைப்பு, மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை, குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்ற மக்கள் பெரிதும் எதிர்பார்த்த அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை.

அம்மா மினி கிளினிக்குகள் மேம்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவலை வெளியிடவில்லை. அதேபோல, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை போன்ற அறிவிப்புகள் இடம் பெறாதது அதிருப்தி அளிக்கிறது.

பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தாமல் நூலகங்களுக்கும், புதிய நூலகங்களை அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்திருக்கும் அரசு, நூலகத்தில் உள்ள புத்தகத்தை படிப்பதற்கு கல்வி அறிவு பெற வேண்டிய மாணவர் சமூதாயத்தை மறந்துவிட்டதோ என்ற கேள்வி எழுகிறது.

சிப்காட் அமைக்க விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் எதும் அறிவிக்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக கூறப்படுவது வியப்பை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் அதனைத் தடுக்க எப்போது சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்புகள் ஏதும் இல்லை.

அம்மா உணவகங்களை மேம்படுத்த எந்த ஒரு அறிவிப்பும் இடம்பெறாதது ஏழை, எளிய மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. இந்த அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் மீது கடன் சுமையை மேலும் ஏற்றியதையே சாதனையாக சொல்ல முடியுமே தவிர, பொருளாதாரத்தை முன்னேற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை மேலும், மேலும் துயரக்குழியில் தள்ளும் விளம்பர பட்ஜெட்டாகவே திமுக அரசின் நிதி நிலை அறிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக நிதிநிலை அறிக்கை பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மகளிருக்கு 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல்,தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.