Tamil News
Tamil News
Sunday, 19 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

இன்று நடந்து முடிந்த தமிழக பட்ஜெட் 2023-2024 குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தநிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும்பாலான திட்டங்களுக்கு வரவேற்றிருந்தாலும் ஒருசில திட்டங்கள் குறித்து அறிவிப்பு செய்யாதது வருத்தமளிக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர். 
 
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

அனைத்துச் சமூகப் பள்ளிகளையும் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் கொண்டுவர தமிழ்நாடு அரசு எடுத்துள்ள துணிச்சலான முடிவை வரவேற்கிறேன். பள்ளிகளின் பெயர்களில் இருந்த சாதி அடையாளங்களை நீக்கிட முன் வந்துள்ள மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.பி. சு.வெங்கடேசன்

மதுரையின் வளர்ச்சிக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு காணப்பட “மதுரை மெட்ரோ திட்டம்” அறிவிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 8500 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ள மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மதுரை மக்களின் சார்பில் நன்றி.

சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன்

பட்ஜெட்டில் குறிப்பிட்ட ஒருசில பிரச்னைகள் இருக்கிறது.அதேநேரத்தில் வருவாய் பற்றாக்குறை 62,000 கோடியிலிருந்து 30,000 கோடியாக குறைத்திருப்பது அரசின் நிர்வாகத் திறமையை வெளிப்படுத்துகிறது. மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுச் சின்னம், அண்ணல் அம்பேத்கரின் படைப்புகளை தமிழாக்கம் செய்வதற்கு நிதி ஒதுக்கியது, நாட்டுப்புற கலை பயிற்சி மையம் அமைப்பது, சோழர்களின் அருங்காட்சியகம் அமைப்பது உள்ளிட்டவைகளுக்கு நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை செப்டம்பர் முதல் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்க்கத்தக்கது. 

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வரும் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நிதிநிலை அறிக்கை அமைதி காப்பது ஏமாற்றமாக அமைந்துள்ளது. இருந்தபோதிலும், மக்களின் தேவை இருந்துகொண்டுதான் இருக்கிறது. அவற்றை சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் நிதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று வரும் காலங்களில் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம். இந்த 2023-2024 பட்ஜெட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

சிபிஎம் மாநிலக் குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

இந்த பட்ஜெட் அரசாங்கத்தின் வரவு செலவு கணக்குகளை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது, ஒரு நிதானமான அளவில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன். காலை உணவுத்திட்டம் ஏழை எளிய மாணவர்களுக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதுபோல, மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரவேற்க்கத்தக்கது.

போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியத் தொகை பற்றி எந்த அறிவிப்பும் வராதது வருத்தமளிக்கிறது. இன்னும் ஒரு சில திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்த்தநிலையில், அது பற்றியான அறிவிப்புகள் வரவில்லை. இனி வரும் காலங்களில் அதை நிறைவேற்றுவார்கள் என்ற நம்புகிறோம் என்று பேசியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 

மத்திய அரசைக் காட்டிலும், நிதி பற்றாக்குறையைக் குறைத்திருப்பது திமுக அரசின் திறன்மிக்க நிதி மேலாண்மைக்குச் சான்று. இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முன்னேற்றப் பாதையில் பீடு நடைபோடுவதை இந்த நிதி நிலை அறிக்கை உறுதி செய்துள்ளது.