Tamil News
Tamil News
Wednesday, 22 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

விளக்கம்

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குறித்து சில விளக்கங்களை ஆளுநர், தமிழ்நாடு அரசிடம் கேட்டார். அது குறித்தும் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அதிகாரம் இல்லை

சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 8-ம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்பியதற்கான காரணம் குறித்து ஆளுநர் அளித்துள்ள விளக்கத்தில், "ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை" என்று குறிப்பிட்டு இருந்தார்.

மீண்டும் அனுப்பி வைக்க முடிவு

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இந்த சட்ட முன்வடிவை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மீண்டும் தாக்கல்

இந்நிலையில், இன்றைய தினம் சட்டசபை கூட்டம் தொடங்கியதும், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். "ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு" என லோக்சபாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் இன்று மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதா தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு, அரசின் விளக்கங்கள் குறித்தும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இதனையடுத்து அனைத்துக்கட்சி உறுப்பினர்களுடன் இந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட உள்ளது.

முதலமைச்சர் விளக்கம்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. மாநில பிரச்னைகளில் முடிவெடுக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு மின்னஞ்சலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோரிக்கை விடுத்தனர். ஆன்லைன் ரம்மியால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். கனத்த இதயத்துடன் சட்டமன்றத்தில் நிற்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்தார். இனியொரு உயிர், ஆன்லைன் ரம்மியால் பறிபோக கூடாது. மனசாட்சியை உறங்கச் செய்துவிட்டு எங்களால் ஆட்சியை நடத்த முடியாது. மக்களை காப்பதே சட்டத்தின் கடமை. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அறிவால் உருவாக்கப்பட்ட சட்டம் அல்ல; இந்தயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் என்று மசோதா தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு, அரசின் விளக்கங்கள் குறித்தும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.