Tamil News
Tamil News
Wednesday, 22 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

 

தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாமல் தனித்து போட்டியிட்டால் தான் பாஜக வளரும் எனவும் கூட்டணி வைத்தால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக தேசிய பாஜக தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று விமானம் மூலம் அண்ணாமலை டெல்லி சென்றார். முன்னாதாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சட்டம் ஒழுங்கு 23-ம் புலிகேசி படத்தைப்போல இருக்கிறது

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது 23-ம் புலிகேசி படத்தைப்போல, மன்னா இன்றைக்கு யார் நம்மை பற்றி தவறாக பேசியிருக்கிறார்கள் என்பதுபோல, தமிழக டிஜிபியிடம் கேட்டு வீட்டிற்கு சென்று அவர்களை கைது செய்து சிறையிலடைப்பதுதான். முதலமைச்சருக்கு சமூக வளைதளங்களில் வரக்கூடிய கருத்துக்கள் முள்ளைப்போல குத்துகிறது. தமிழகத்தில் ஆணவப்படுகொலை போன்ற சம்பவங்கள் செய்கிறவர்களைத் தண்டிக்காமல் 18,19 வயது இளைஞர்களை கைது செய்து சிறையிலடைக்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரை சமூக வலைதளத்தின் மீது காவல்துறை கண்ணாக இருப்பது எந்தவிதமான சட்ட ஒழுங்கையும் காப்பாற்றவில்லை என்பதை காட்டுகிறது என்று தெரிவித்தார்.

செந்தில் பாலாஜிக்கு சவால்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை, நான் சிறுக சிறுக சேமித்த பணத்தையெல்லாம் அறவக்குறிச்சி தேர்தலில் செலவழித்துவிட்டு வெறும் ஆளாக நிற்கிறேன் என்று பேசியிருந்தார். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை அரவக்குறிச்சி தேர்தலில் 30 கோடி செலவு செய்திருப்பதாகவும், குறைந்த கால காவல் பணியில் எப்படி அவ்வளவு பணம் சம்பாதித்தார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை அரசு இயந்திரங்கள் எல்லாம் உங்களிடத்தில் இருக்கிறது. ஆகவே, என்னுடைய காவல் பணியில் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்கிறேனா என்று கர்நாடகாவில் சல்லடைபோட்டு தேடுங்கள் என்று செந்தில் பாலாஜிக்கு சவால் விடுத்துள்ளார்.

இன்னொரு கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் நான் முட்டாள்

தொடர்ந்து பேசிய அவர், கூட்டணிக் கட்சித்தலைவர்கள் பாஜக வளர்ந்து வருவதை விரும்பவில்லை. யாரும் அவர்கள் கட்சியை வளர்க்க நினைப்பார்கள். கூட்டணி கட்சியை வளர்க்க நினைக்க மாட்டார்கள். பாஜக-வை வளர்க்க வேண்டும் என்று நினைக்க மாட்டாங்க. நானும் இங்கிருந்து கொண்டு கூட்டணி கட்சியை வளர்க்கனும் என்று நினைக்க மாட்னே். இங்கிருந்து இன்னொரு கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் நான் முட்டாள். அரசியலைப் பொறுத்தவரை என்னுடைய தீர்க்கமான நம்பிக்கை நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்று தெரிவித்தார்.  

இறுதியாக, கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், நேரமும் காலமும் வரும் அப்பொழுது சொல்கிறேன். இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது.  உங்களுடைய கடையை திறப்பதற்கு நான் இங்கு அரசியல்வாதியாக இல்லை என்று நரேந்திர மோடி சொல்வதை குறிப்பிட்டு பேசிவிட்டு சென்றிருக்கிறார்.