Tamil News
Tamil News
Thursday, 23 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

காரணம் என்ன? 

'மோடி' என்ற பெயர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று (23-03-2023) அதிரடியாக உத்தரவிட்டது. 

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'எல்லா திருடர்களும் ஏன் 'மோடி' என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர் என்று பேசியிருந்தார். 

அவதூறு வழக்கு

இதனடிப்படையில், குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, ராகுலுக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ஒட்டுமொத்த 'மோடி' சமூகத்தையும் ராகுல் இழிவுபடுத்தி விட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இதன் இறுதிகட்ட விசாரணை கடந்த 17-ந் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில், மோடி சமூகத்தினரை குறித்து ராகுல் காந்தி அவதூறாக  பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு.

2 ஆண்டுகள் சிறை

மோடி என்ற பெயர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்ற தலைமை நீதிபதி  எச்.எச்.வர்மா இந்த தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார். 

2 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.15,000 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 499 (அவதூறு), 500 (அவதூறுக்காக தண்டனை) ஆகியவற்றின் கீழ் அவரை குற்றவாளி என்று அறிவித்தார் நீதிபதி. மேலும், அவருக்கு இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய ஏதுவாக ஜாமினும் அளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக 30 நாட்களுக்குள் அவர் மேல் முறையீடு செய்யலாம். அதுவரை அவருக்கு இந்த சிறைத் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் உத்தரவிட்டார்.

இந்தநிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு சட்டசபை முடிந்த கணமே கழுத்தில் கருப்பு பேட்ச் அணிந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

எம்.பி. பதவி பறிப்பு

இந்நிலையில் 1951ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு (8) (3)-ன் படி, எந்த ஒரு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினருக்கும் இரண்டு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுக்கு மேல் தண்டனை விதிக்கப்படுமாயின், அவரது உறுப்பினர் பதவி உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்ற செயலாளர் உத்பால் குமார் சிங், ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து இன்று (24-03-2023) உத்தரவு பிறப்பித்துள்ளார். ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.