Tamil News
Tamil News
Saturday, 25 Mar 2023 00:00 am
Tamil News

Tamil News

மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் உத்தரபிரதேச அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரன் ரேட் அடிப்படையில் ஏற்கெனவே  இறுதிப்போட்டிக்கு நேரடியாக  தகுதிபெற்ற நிலையில், இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் மோதும் வாய்பை  முடிவு செய்யும் எலிமினேட்டர் போட்டி நேற்று (மார்ச்-24) மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் நடந்தது.  இந்த போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் மற்றும் உத்தரபிரதேச வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற உபி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்

இதனையடுத்து களமிறங்கிய  மும்பை இந்தியன்ஸ்  அணியின்  தொடக்க வீராங்கனைகளான யாஷ்திகா பாட்டியா 21 ரன்களிலும், ஹார்லி மேத்தீவ்ஸ் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய நடாலி ஸ்கிவர்-பிரண்ட்  அதிரடியாக விளையாடி உபி வாரியர்ஸ்  அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். நடாலி ஸ்கிவர்பிரண்ட்  38 பந்துகளில் 72 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் மும்பை  அணிக்கு பலம் சேர்த்தார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 14 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய  அமீலா கெர் 19 பந்துகளில்  29 ரன்கள் அடித்தார். இறுதியில் களமிறங்கிய  பூஜா வஸ்த்ரகர் 4 பந்தில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என  11 ரன்கள் அடிக்க மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் மட்டும் இழந்து 182 ரன்கள் சேர்த்தது.

உத்தரபிரதேச வாரியர்ஸ் பேட்டிங்

183 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் முன்னேற முடியும் என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய  உபி வாரியர்ஸ்  அணிக்கு ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது. உபி வாரியர்ஸ்யின் தொடக்க ஆட்டக்காரரும்  அதிரடி வீராங்கனையுமான  அலிசா ஹெலி 11 ரன்களில் ஆட்டமிழந்தர். மற்றொரு  தொடக்க வீராங்கனையான   ஸ்வேதா செரவாத் 1 ரன்  மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய  தஹிலா மெக்ராத்   7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க உபி வாரியர்ஸ் அணி ரன்  சேர்க்க முடியாமல் தடுமாறியது. பின்னர் களமிறங்கிய கிரண் நவ்கிரே  அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். ஆட்டத்தின்  13வது ஓவரை வீச வந்த இஸ்ஸி வோங் தொடர்ந்து  3 விக்கெட்டுகளை வீழ்த்தி மகளிர்  பிரீமியர் லீகின் முதல்  ஹாட்ரிக் சாதனையை   நிகழ்த்தினார். இறுதியில் களமிறங்கிய அஞ்சலி சர்வாணி மற்றும் ராஜேஸ்வரி கயக்வாட் தலா  5 ரங்களுக்கு ஆட்டமிழக்க  உபி வாரியர்ஸ் அணி 17.4 ஓவரில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலன் 72 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார  வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு  முன்னேறியுள்ளது. ஆட்ட நாயகி விருதை 38 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய  நடாலி ஸ்கிவர்பிரண்ட் பெற்றார்.

இந்நிலையில், டாடா மகளிர் பிரீமியர் கிரிக்கெட் தொடரின் முதல் சீசனின் இறுதிப்போட்டி நாளை (26-03-2023) நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி மற்றும் டெல்லி கேபிட்டள்ஸ் மகளிர் அணி மோதவுள்ளன. இந்தப்போட்டியில் வெற்றிபெறும் அணி முதல் மகளிர் பிரீமியர் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.