Tamil News
Tamil News
Sunday, 26 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

முறைகேடு

தென்காசி ஆகாஷ் ப்ரெண்ட்ஸ் அகாடமியில் படித்த 2000 தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இவர்களில் பெரும்பான்மையினர் காரைக்குடி தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள். ஆகவே, ஒரே நிறுவனத்தின் மையத்தில் 2000 பேர் வெற்றி பெற்றது எப்படி என தேர்வர்கள் சந்தேகம் எழுப்பினர். இதற்கு முறையான பயிற்சி அளித்து அதிக நபர்களை குரூப் 4 தேர்வில் வெற்றி பெற செய்துள்ளோம் என பயிற்சி மையம் விளக்கம் அளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, "குரூப் 4 ஆள்சேர்க்கை அறிவிப்பின் போதே தட்டச்சு பிரிவில் இரண்டு higher முடித்தவர்களுக்கே தேர்வு முடிவுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மதிப்பெண் குறைந்தவர்கள் தட்டச்சர் பிரிவில் கிடைத்த முன்னுரிமையால் தரவரிசையில் முன்னனி இடம் பிடித்துள்ளனர். நில அளவர் தேர்வில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து அடுத்தடுத்த பதிவெண் கொண்ட தேர்வர்கள் 700 பேர் தேர்ச்சி பெற்ற விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படும்" எனக் கூறியிருந்தது. 

திருப்பம்

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த பல இளைஞர்கள் தென்காசியில் தேர்வு எழுதியதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அவர்கள் கருவூல அதிகாரிகளின் உதவியுடன் கேள்வித்தாள்களை முன்கூட்டியே வெளியிட்டதாக கூறப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்கள் கருவூலங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். கருவூலங்களுக்கு கேள்வித்தாள்கள் அனுப்பப்படும் நிலையில், கருவூல அதிகாரிகள் துணையோடு முறைகேடு நடந்திருக்கலாம் என தகவல்.

சொந்த இருப்பிட முகவரி அடிப்படையில் சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுதாமல், குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியதால் சர்ச்சை. தென்காசியில் தேர்வு பெற்ற இளைஞர்கள் பலரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

2019-ல் இராமநாதபுரம் கீழக்கரையில் குறிப்பிட்ட தேர்வு மையங்களில், பல்வேறு வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டனர். இராமநாதபுரம் முறைகேடு பாணியில் தற்போதைய முறைகேடும் அரங்கேறி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சட்டப்பேரவையில் எதிரொலி

இந்த நிலையில், இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசியுள்ளார். அரசு மற்றும் அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருந்ததால் தான் 700 பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர். மிகப்பெரிய ஊழல், தவறு இதில் நடந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.