Tamil News
Tamil News
Sunday, 26 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

திருச்சி காவல் நிலையத்தில் புகுந்து எம்.பி. திருச்சி சிவா ஆதரவாளர்களை தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நேரு ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

தாக்குதல்

திருச்சி கண்டோன்மெண்ட் நியூ ராஜா காலனி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என். நேரு கடந்த 15-ம் தேதி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா கல்வெட்டில் எம்.பி. திருச்சி சிவா பெயர் சேர்ப்பது தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து எம்.பி. திருச்சி சிவா வீட்டில் அமைச்சர் கே.என். நேரு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். கார், இருசக்கர வாகனம், மின்சார விளக்குகளை அடித்து நொறுக்கினர்.

இது தொடர்பாக, திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்.பி. திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது நேருவின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பெண் காவலருக்கு காயம் ஏற்பட்டது. காவல் நிலையத்தில் இருந்த கணினி, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன.

கட்சியில் இருந்து நீக்கம்

இச்சம்பவத்தில் தொடர்புடைய திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான காஜாமலை விஜய், திமுக துணைச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான முத்துச்செல்வம், அந்தநல்லூர் ஒன்றிய தலைவரும், மாவட்ட பொருளாளருமான துரைராஜ், 55-வது வட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ராம்தாஸ் ஆகிய நான்கு பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.

ஜாமீன் கோரி மனு தாக்கல்

இதைத்தொடர்ந்து, காஜாமலை விஜய், முத்து செல்வம், ராம்தாஸ், துரைராஜ், திருப்பதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐந்து பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் திருச்சி இரண்டாவது ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஐந்து பேருக்கும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் பாலாஜி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.

தள்ளுபடி

நேரு ஆதரவாளர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் ஆஜரானார். இதைத் தொடர்ந்து ஓம் பிரகாஷ் ஜூனியர் வழக்கறிஞர் அதே நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஐந்து பேர் சார்பில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை மாஜிஸ்திரேட் பாலாஜி நேற்று தள்ளுபடி செய்தார். இதன் மூலம் இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நிபந்தனை ஜாமீன் 

இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி பாபு ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மதுரை மாவட்டம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.