Tamil News
Tamil News
Wednesday, 29 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

வைக்கம் போராட்ட வரலாறு

அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் சிவன் கோயிலைச் சுற்றிலுமுள்ள நான்கு தெருக்களில் ஈழவர் உட்பட தாழ்த்தப்பட்டோர் நடக்கத் தடை இருந்தது. இத்தகைய தடை கேரளம் முழுவதும் இருந்து வந்தது. இத்தடையை நீக்கி அவ்வீதியில் நடக்க உரிமை வேண்டி நிகழ்ந்த சத்தியாகிரகமே வைக்கம் போராட்டம். ஈழவர் தலைவர் டி.கே.மாதவன் பல்லாண்டு முன்முயற்சியில் கிளர்ந்த இந்த வைக்கம் போராட்டத்திற்கு உற்சவ மூர்த்தியாகவும், மூளையாகவும் இருந்த கேரள காங்கிரஸ் தலைவர்கள் கே.பி.கேசவ மேனனும், ஜார்ஜ் ஜோசப்பும் தொடங்கி வைத்தனர். தமிழ்நாட்டுப் பெரியார், கேளப்பன், குரூர் நீலகண்டன் நம்பூதிரி போன்றோர் போராட்டத்தைச் செயல்படுத்தி, காந்தி நிறைவில் வந்து முடித்து வைத்தார் எனச் சுருக்கமாக வைக்கம் போராட்டச் சரித்திரத்தை சொல்லலாம்.

கிறிஸ்தவரும் முஸ்லிம்களும் அந்தத் தெருவில் நடக்கலாம். இந்துவான ஈழவர் நடக்க அனுமதி இல்லை. இந்த முரண் ஏன் என்பது சத்தியாகிரகிகளின் வாதங்களுள் ஒன்று. அதற்குப் பதில் அளித்த அதிகாரிகள், அவர்களையும் வேண்டுமானால் தடுத்துவிடுகிறோம் என்று கூறினர். இதைக் கிண்டல் செய்தார் பெரியார். “நாங்கள் பசியாக இருக்கிறோம் என்று சொன்னால், பசியாக இருக்கிறோம் என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் என்றால், மற்றவர் சாப்பிடுவதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அரசாங்கம் சொல்கிறது. அவர்கள் சாப்பிடும் உணவைப் பறித்துவிடுகிறோம் என்கிறது” என்றார்.

ஈழவரின் மீதான தீண்டாமையை மறுத்துப் பேசிய பெரியார்; “உடம்பின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவது போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக இடது கை பயன்படுகிறது. ஒவ்வொரு கைக்கும் தனித் தந்தை, தாய் உண்டா? இடது கையைத் தொடும்போதெல்லாம் வலது கை குளித்து முழுக வேண்டும் என்று நினைக்கிறதா? நாம் கடவுளைத் தொழும்போது வலது கையுடன் மட்டும் செல்கிறோமா? கோயிலுக்குச் செல்லும்போது நமது இடது கையை விட்டுவிட்டுச் செல்கிறோமா? வலது பக்கம் இடது பக்கத்தைவிட உயர்வானது என்றால் இடது கண்ணால் நம்மைப் பார்ப்பவரைக் குற்றம் சொல்லுகிறோமா அல்லது வலது காலால் உதைபடும்போது சந்தோஷப்படுகிறோமா?” என்று சாதாரண மக்களுக்கும் புரியும்படியாகப் பேசினார் பெரியார்.

தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

இப்படிப்பட்ட சமூதாய சீர்திருத்தத்திற்கு வித்திட்ட போராளிகளை கொண்டாட வேண்டியது அரசின் கடமை. அந்தவகையில் அவர்களை கொண்டாடும் விதமாக, இன்றைய சட்டப்பேரவையில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா ஓராண்டுக்கு சிறப்பாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு செய்தது மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அதுபற்றி சட்டப்பேரவையில் பேசியதாவது; 'வைக்கம் போராட்டம் தொடங்கிய நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று; வரலாற்றின் முழு முக்கியமான நாள். வைக்கம் போராட்டம் வெற்றி பெறக் காரணமாக இருந்த பெரியாரை போற்றும் விதமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிடுகிறேன். ஒன்னறை ஆண்டுகளுக்கும் மேல் நடந்த வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23-ம் நாள் முடிவுக்கு வந்தது. அதே ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது.

இந்தியாவில் நடந்த அனைத்து கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்துற்கும் முன்னோடியாக திகழ்ந்தது வைக்கம் போராட்டம். ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட இருக்கிறது. ஓராண்டு முழுவதும் அப்போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படும். வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து கிராமத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். செப்டம்பர் 17-ம் தேதி சமூக நீதி நாள் அன்று தமிழ்நாடு அரசால் வைக்கம் விருது வழங்கப்படும்' என்று அறிவிப்பு செய்திருக்கிறார்.