Tamil News
Tamil News
Wednesday, 29 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதை திமுக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கண்டனத்திற்குரியது

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட எண்.10 முத்தூர் பகுதியில், முறைகேடாக இயங்கும் கல்குவாரிகளில் கனிம வளங்கள் கேரளாவுக்கு அதிகளவு கடத்தப்படுவது குறித்து, செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அருண் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலாஜி ஆகியோரை திமுகவைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் மிரட்டி, ஒளிப்படக் கருவிகளைச் சேதப்படுத்தி, அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற திமிரில் திமுகவினர் செய்யும் இத்தகைய வன்முறை செயல்களை ஆளும் திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

வலியுறுத்தல்

முறைகேடாக இயங்கும் கல்குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதோடு, பாறைகள் வெடி வைத்துத் தகர்க்கும்போது உருவாகும் மண் துகள்கள் நிலங்களில் படிவதால் வேளாண்மை செய்ய முடியாமல் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அதிகளவு பாரம் ஏற்றிச் செல்லும் பார உந்துகளால் சாலைகளும் அடிக்கடி சேதமடைவதோடு, அது குறித்துப் புகாரளிக்கும் பொதுமக்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமெனவும், தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது திமுகவினர் நடத்தும் தாக்குதல்களை இனியும் தொடராது தடுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதை திமுக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.