Tamil News
Tamil News
Thursday, 30 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

வழக்கு

2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஆபாச திரைப்பட நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை மறைத்ததாக எழுந்த புகாரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு ட்ரம்ப்பும், ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாச நட்சத்திரமும் நெருங்கிய உறவில் இருந்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே ட்ரம்ப் மீது பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ள நிலையில், அதனை மறைப்பதற்காக ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஸ்டோர்மி டேனியல்ஸ்-க்கு பணம் கொடுத்தது தொடர்பாக ட்ரம்ப் மீது 30-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆதாரம் கைப்பற்றல்

டொனால்ட் ட்ரம்ப் மீதான இந்த வழக்கு மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் விசாரணையில் உள்ளது. ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன், இந்த வழக்கில் ட்ரம்பிற்கு எதிராக சாட்சியளித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், ஸ்டோர்மி டேனியல்ஸ்க்கு பணம் வழங்கியதற்கான ஆதாரங்களையும் வழக்கறிஞர் அலுவலகம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

முதன்முறையாக..

 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கிற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஜோ பைடன் அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயரை ட்ரம்ப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிஜமாகுமா?

மேலும், இந்த குற்றச்சாட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டதாக கடந்த வாரம் போலிப் புகைப்படங்கள் இணையத்தில் பரவின. அதில் போலீசாரிடமிருந்து ட்ரம்ப் தப்பிச் செல்வது போலவும், அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து அழைத்து செல்வது போன்ற படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகின. தற்போது டொனால்ட் ட்ரம்ப் மீது போடப்பட்டிருக்கிற இந்த கிரிமினல் வழக்குப் பதிவு, அவராகவே முன் வந்து சரணடைய வேண்டும், இல்லாவிட்டால் அவரை அமெரிக்க காவல்துறையே நேரில் சென்று கைது செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் இணையத்தில் வைரலான புகைப்படம் நிஜமாகும் என்பது உறுதி.