Tamil News
Tamil News
Friday, 31 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

விளம்பரத்தில் கொட்டிய கோடிகள்

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ளது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ளது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதந்தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தனர். அதாவது, 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்ற மோசடி விளம்பரம் செய்யப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 9,255 பேரிடம் ரூ 2,438 கோடி பணம் வசூலித்தது தெரியவந்தது.

சோதனை

ஆனால், பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை குறிப்பிட்ட காலத்தில் திருப்பி வழங்காமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. இதையடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

பாஜக நிர்வாகி கைது

இந்த சம்பவம் குறித்து ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில செயலாளரான ஹரீஷை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கடந்த வாரம் அவரை கைது செய்தனர். அது போல் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகியான மாலதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் ரூசோ கைது

காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் முகவராக செயல்பட்ட தொழிலதிபரும் நடிகருமான ரூசோ கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவருடைய வங்கிக் கணக்கில் ரூ 1 கோடியே 40 லட்சத்தை முடக்கி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விசாரணை வளையத்தில் சிக்கிய நடிகர் ஆர்.கே.சுரேஷ்

இந்த நிலையில், ஆருத்ரா நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரின் விசாரணை வளையத்தில் இருக்கும் ஆர்.கே.சுரேஷ் விசாரணையில் இருந்து தப்பிக்க 2 மாதங்களாக வெளிநாட்டில் தங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே கைதான நடிகர் ரூசோ அளித்த தகவலின் பேரில் ஆர்.கே. சுரேஷ் தற்போது வந்த வழக்கில் சிக்கி இருக்கிறார்.