Tamil News
Tamil News
Monday, 03 Apr 2023 00:00 am
Tamil News

Tamil News

கர்நாடக 2023 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக தேர்தலில் களமிறங்கும் அதிமுக

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறவுள்ளநிலையில், கர்நாடகாவில் குறிப்பிட்ட சதவீத தமிழர்கள் வசித்து வருவதால் அவர்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்கு அதிமுக ஆயத்தமாகி இருக்கிறது. நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விருப்பத்தை தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதாவது, கர்நாடக சட்டமன்றத் தேட்தலில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக ஆர்வமிருப்பதாக நிதியமைச்சரிடம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

தமிழர்களின் வாக்குகள்

கர்நாடகாவை பொறுத்தவரையில், தெற்கு கர்நாடகா தமிழர்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. அதாவது, பெங்களூருவில் மொத்தம் 4 தொகுதிகள் உள்ளன. சிவாஜி நகர், சி.வி.ராமன் நகர், மகாதேவபுரா, ராராஜேஸ்வரி நகர் என்று உள்ளன. இதில், சிவாஜி நகரில் 10 முதல் 20 சதவீத தமிழர்களின் வாக்குகள் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. சி.வி.ராமன் நகரில் 10 முதல் 20 சதவீத வாக்குகள் உள்ளன. மகாதேவபுராவில் 10 முதல் 20 சதவீத வாக்குகளும், ராஜராஜேஸ்வரி நகரில் 10 முதல் 20 சதவீத வாக்குகளும் உள்ளன. 

அதேபோல், கோலார் மாவட்டத்தில் கே.ஜி.எஃப், கோலார், மல்லூர், பங்காரபேட் என மொத்தம் 4 தொகுதிகள் உள்ளன. கே.ஜி.எஃப் தொகுதியில் 20% தமிழர்களின் வாக்குகள் இருக்கின்றன. கோலார் தொகுதியில் 15-20 சதவீத வாக்குகளும், மல்லூர் தொகுதியில் 10 சதவீத வாக்குகளும், பங்காரபேட் தொகுதியில் 10 சதவீத வாக்குகளும் இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கின்றன. அதேபோல், மைசூர் மாவட்டத்தில் ஹன்சூர் தொகுதியில் 5 முதல் 8 சதவீத வாக்குகளும் உள்ளன. சாம்ராஜாநகர் மாவட்டத்தில் ஹனூர் தொகுதியில் 5 முதல் 8 சதவீத தமிழர்களின் வாக்குகளும் உள்ளன.  

கர்நாடகவில் அதிமுக வரலாறு

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் பெங்களூரு மற்றும் கோலார் பகுதிகளில் உள்ள தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுப்பெறுவதாக அதிமுக திட்டமிட்டுள்ளது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் கர்நாடகாவில் ஏற்கனவே அதிமுக மூன்று முறை வென்றுள்ளதாக வரலாறு இருக்கின்றன. கர்நாடகாவில் கோலார் மாவட்டத்தில் உள்ள கே.ஜி.எஃப் தொகுதியில் பக்தவச்சலம் மூன்று முறை வெற்றி பெற்றிருக்கிறார். அதாவது, 1983, 1989, 1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அதிமுக வெற்றியை பெற்றிருக்கிறது. மேலும், கர்நாடகாவில் உள்ளாட்சி அமைப்புகளிலும் அதிமுக ஒருசில இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 

தொகுதிகளை ஒதுக்குமா பாஜக

2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் என மும்முனை போட்டியாக செயல்பட்டு கொண்டிருக்கக்கூடிய சூழலில் தற்போது அதிமுக அதன் பிந்தைய வரலாறுகளையும், தமிழர்களின் வாக்கு வங்கியையும் வைத்துக்கொண்டு, கர்நாடக அரசியலில் தங்களுடைய கால்தடத்தை பதிக்க திட்டமிட்டிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக  பாஜகவிற்கு தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்கிற சூழலில், அதிமுக கர்நாடகா தேர்தலில் போட்டியிட இரண்டு அல்லது மூன்று இடங்களை பாஜகவிடம் கேட்டிருப்பதாக தகவல் வெளியானநிலையில், பாஜக அதிமுக கேட்கும் தொகுதிகளை ஒதுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.