Tamil News
Tamil News
Monday, 03 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் வெளியிட்டிருந்த நிலையில், நிலக்கரி எடுக்க அனுமதி அளிக்க முடியாது என தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

நிலம் கையகம்

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 ஆகிய 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்து நெய்வேலிக்கு அருகே ஆண்டுக்கு 1.15 கோடி டன் நிலக்கரி எடுக்கும் 3-வது மிகப்பெரிய சுரங்கத்தை ரூ. 3,556 கோடி செலவில் அமைக்க என்.எல்.சி இந்தியா நிர்வாகக் குழுவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதி அன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதற்காக 12,125 ஏக்கர் உட்பட மொத்தம் 25,000 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி கையகப்படுத்தவுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் 4 திட்டங்கள்

என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரி படுகையை ஒட்டியே அமையவுள்ளது. ஐந்தாவதாக வீராணம் நிலக்கரித் திட்டம், ஆறாவதாக பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம், ஏழாவதாக சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், எட்டாவதாக தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரித் திட்டம், ஒன்பதாவதாக அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளன.

இவற்றில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 3 நிலக்கரி திட்டங்கள் தவிர, மீதமுள்ள 6 திட்டங்களுக்காக மட்டும் குறைந்தது 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப் படக் கூடும். இவற்றில் வீராணம், பாளையம்கோட்டை, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே, வடசேரி ஆகிய 4 திட்டங்கள் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன.

விவசாயிகள் எதிர்ப்பு

இந்தநிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம் பெயரும் நிலை ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பு எங்கள் தலையில் இடி விழுந்தது போல உள்ளது என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

அரசு விளக்கம்

இந்தநிலையில், டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் வெளியிட்ட நிலையில், நிலக்கரி எடுக்க அனுமதி அளிக்க முடியாது என தமிழ்நாடு தொழில் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது; ஆய்வில் நிலக்கரி இருப்பது உறுதியானால், மாநில அரசு அனுமதித்தால் மட்டுமே நிலக்கரி எடுக்க முடியும். நிலக்கரி இருக்கிறதா என்பது குறித்த ஆய்வுகளை மத்திய அரசு நேரடியாக மேற்கொள்ளலாம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதால் நிலக்கரி எடுக்க அனுமதி கொடுக்க இயலாது என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க அனுமதி கொடுக்க முடியாது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.