Tamil News
Tamil News
Monday, 03 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று (திங்கள் கிழமை) அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

பந்து வீச்சை தேர்வு செய்த லக்னோ அணி 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல் ராகுல் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே – ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமிறங்கினர். ஆரம்பம் முதல் அதிரடி காட்டத் தொடங்கிய இந்த ஜோடியில் ருதுராஜ் கிருஷ்ணப்பா கவுதம் ஓவரில் சிக்ஸர் மழை பொழிந்தார். அந்த ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பிறகு சில பவுண்டரிகளை ஓட விட்ட அவர் 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

அதிரடி காட்டிய ருதுராஜ்

மறுமுனையில் ருதுராஜூக்கு ஈடுகொடுத்து பந்துகளை விரட்டியடித்த கான்வே 4 பவுண்டரிகளுடன் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 47 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பிறகு வந்த சிவம் துபே 27 ரன்னிலும், மொயீன் அலி ஹாட்ரிக் பவுண்டரிகளை துரத்தி 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் ஸ்டோக்ஸ் 8 ரன்னிலும், ஜடேஜா 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் களம் புகுந்த தோனி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 12 ரன்னில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 217 ரன்கள் எடுத்தது. இதனால், லக்னோ அணிக்கு 218 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக மார்க் வூ மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இமாலய வெற்றி இலக்கு 

தொடர்ந்து 218 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய லக்னோவுக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. அந்த அணியின் தொடக்க வீரரான கைல் மேயர்ஸ் சென்னையின் பந்துவீச்சை தும்சம் செய்தார். அதிரடியை சற்றும் நிறுத்தாத மேயர்ஸ் அரைசதம் அடித்தார். 22 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸருடன் 53 ரன் எடுத்து மொயீன் அலி பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த தீபக் ஹூடா 2 ரன்னிலும், மறுமுனையில் இருந்த கேப்டன் ராகுல் 20 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய க்ருனால் பாண்டியா 9 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 21 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 32 ரன்னிலும் அவுட் ஆகினர். 

12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 

லக்னோவின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய துஷார் தேஷ்பாண்டே ஒயிடு, நோ-பாலுடன் 14 ரன்களை விட்டுக்கொடுத்தார். இறுதியில். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணியால் 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சென்னை அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் 3வது லீக் ஆட்டத்தில் பரம போட்டியாளரான மும்பை இந்தியன்ஸ் அணியை ஏப்ரல் 8ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.