Tamil News
Tamil News
Monday, 03 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

நிலம் கையகம்

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 ஆகிய 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்து நெய்வேலிக்கு அருகே ஆண்டுக்கு 1.15 கோடி டன் நிலக்கரி எடுக்கும் 3-வது மிகப்பெரிய சுரங்கத்தை ரூ. 3,556 கோடி செலவில் அமைக்க என்.எல்.சி இந்தியா நிர்வாகக் குழுவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதி அன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதற்காக 12,125 ஏக்கர் உட்பட மொத்தம் 25,000 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி கையகப்படுத்தவுள்ளது.

என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரி படுகையை ஒட்டியே அமையவுள்ளது. ஐந்தாவதாக வீராணம் நிலக்கரித் திட்டம், ஆறாவதாக பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம், ஏழாவதாக சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், எட்டாவதாக தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரித் திட்டம், ஒன்பதாவதாக அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளன.

இவற்றில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 3 நிலக்கரி திட்டங்கள் தவிர, மீதமுள்ள 6 திட்டங்களுக்காக மட்டும் குறைந்தது 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப் படக் கூடும். இவற்றில் வீராணம், பாளையம்கோட்டை, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே, வடசேரி ஆகிய 4 திட்டங்கள் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன.

விவசாயிகள் எதிர்ப்பு

இந்தநிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம் பெயரும் நிலை ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பு எங்கள் தலையில் இடி விழுந்தது போல உள்ளது என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

டெல்டா மாவட்டத்திலிருந்து ஒரு பிடி மண் கூட எடுக்க விடமாட்டேன்

என்.எல்.சி விவகாரம் குறித்து ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை. மாநில அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? மாநில அரசிடம் இது தொடர்பாக கேட்டால், எங்களுக்கு தெரியாது என கூறுகின்றனர். மத்திய அரசுடன் மாநில அரசு கைகோர்த்து செயல்படுகிறது என்று தெரிவித்தார்.

மேலும், என்.எல்.சி தரும் மின்சாரம் எங்களுக்கு தேவையில்லை. டெல்டா மாவட்டத்திலிருந்து ஒரு பிடி மண் கூட எடுக்க விடமாட்டேன். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். சட்டப்பேரவையில் என்.எல்.சி நிறுவனத்திற்கு, 6 சுரங்கங்களுக்கான அனுமதி கிடையாது என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்

இந்தநிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மாநில அரசு அனுமதி அளிக்காது என்று உறுதியளித்தார். என்.எல்.சி தொடர்பாக பேசிய அவர், “புதிய நிலக்கரி சுரங்கங்களை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள திருவாரூர், தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்படாது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நாளை முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்” என்று பேசியிருக்கிறார்.