Tamil News
Tamil News
Thursday, 06 Apr 2023 00:00 am
Tamil News

Tamil News

அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியில் தொடங்கி, ராகுல் காந்தி பதவி பறிப்பு, நாடாளுமன்றம் முடக்கம் என தற்போது பேரணி வரைக்கும் வந்து நிற்கிறது இந்த முற்றுப்பெறாத அதானி விவகாரம். அதானி மீதான மோசடி வழக்கை நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று எத்தனிக்கிறது இந்த எதிர்க்கட்சிகள். ஆனால், இவர்களின் கூச்சலினையும் முழக்கங்களையும் செவி மடுக்காமல் ஊமை காத்து வருகிறது ஆளும்கட்சி. இதனாலேயே ராகுல் காந்தியின் பதவி பறிப்புகளும், நாடாளுமன்ற முடக்கமும், கருப்புச் சட்டையும், பேரணியும் என ஆளும்கட்சிக்கெதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எதிர்க்கட்சிகள். இவற்றிற்க்கான காரணங்களையும், விளக்கங்களையும் கேட்காமலே சைலண்ட் மோடில் அவையில் அமர்ந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

அதானி குறித்து உண்மை வெளிவரும் வரை ஆயிரக்கணக்கான முறை நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்போம், நாங்கள் நிறுத்த மாட்டோம் என்று மக்களவையில் ராகுல் காந்தி பேசியிருந்தார். அதுபோலவே, அதானி பற்றியான விவகாரம் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்குப் பிறகு, ஆளும்கட்சிக்கெதிரான எதிர்க்கட்சிகளின் முழக்கங்களும் போராட்டங்களும் சற்றும் அதிகரித்தது. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற அவையில் அமளியில் ஈடுபட்ட வந்த எதிர்க்கட்சியினர், தகுதி நீக்கத்திற்குப் பிறகு தொடர்ந்து எதிர்ப்புக்குரல் எழும்பியதால், இரு அவைகளும் நேற்று காலை வரை அதாவது, ஏப்-05 வரை ஒத்திவைக்கப்பட்டது. 

அதன்படி, நேற்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அதானி பங்குச்சந்தை முறைகேடு புகாரில் கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள், கருப்பு சட்டை அணிந்து வந்து சபாநாயகர்கள் மேஜை முன்பு, நின்று முழக்கமிட்டனர். இதனால், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியதுமே, நேற்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 2 மணிக்கு இரு அவைகளும் தொடங்கிய நிலையில், அதானி பங்குச்சந்தை முறைகேடு புகாரில் கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கின. எப்போதும் போல் எதிர்க்கட்சியினர் கூட்டுக்குழு விசாரணையை வலியுறுத்தி சபாநாயகர் மேசை முன்பு வந்து பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பினர். இன்றும் எதிர்க்கட்சியினர் கருப்பு உடையில் வந்திருந்தனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்றும் இரு அவைகளும் முடங்கியது. எதிர்க்கட்சிகளின் முழக்கத்திற்கு செவி சாய்க்காமல் அமைதியாக இருக்கையில் அமர்ந்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. 

அமளியால் மக்களவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டும், நாடாளுமன்ற மேலவை மதியம் 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்ட சூழலில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் நோக்கி தேசிய கொடியுடன் பேரணியாக புறப்பட்டு சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த இந்த பேரணியில், திமுக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சிவசேனா, ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியவை இந்த பேரணியில் பங்கேற்றன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதை முன்னிட்டு, அவைத்தலைவர் ஓம் பிர்லா தேநீர் விருந்து ஏற்பாடு செய்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்து பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதானி விவகாரம் தலைவிரித்தாடும் சூழலிலும், அதனை கண்டுகொள்ளாமல் இருப்பது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. ஜனநாயகம் வெற்றி பெறுவதற்காக இவர்கள் நடத்தும் இந்த யுத்தம் முற்றுப்பெறுவதற்கான காலத்தை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்...