Tamil News
Tamil News
Wednesday, 05 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

பயணிகளின் உயிரோடு விளையாடாமல் 400 ஓட்டுநர்களை நியமிப்பதற்கான ஒப்புதலை ரத்து வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார். 

பேருந்துகளை இயக்க ஒப்பந்தம்

தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் அடிப்படையில் 400 தற்காலிக ஓட்டுநர்களை நியமனம் செய்ய போக்குவரத்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 12 பணிமனைகளில் ஒப்பந்த ஓட்டுநர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஓட்டுநர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்ட நிலையில், சென்னையை சேர்ந்த 4 தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

தொழிலாளர்கள் மத்தியில் கவலை

அரசு பேருந்து போக்குவரத்து தனியார் மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என துறை அமைச்சர் உறுதி அளித்ததற்கு மாறாக அரசு போக்குவரத்து தனியார் மயமாக்கப்படுகிறதோ என்று தொழிலாளர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. தனியார் நிறுவனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்படும் விதம், அவர்களின் திறன் குறித்து ஊழியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

டிடிவி கருத்து

இந்த நிலையில், ஓட்டுநர்கள் நியமனம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ”தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவன ஒப்பந்தம் மூலம் 400 ஓட்டுநர்கள் நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

உயிரோடு விளையாடாதீர்

மேலும், “இந்த நிலையில் அவர்கள் அரசு விரைவுப் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டால் அதில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நேரிடும் என்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, பயணிகளின் உயிரோடு விளையாடாமல் 400 ஓட்டுநர்களை நியமிப்பதற்கான ஒப்புதலை ரத்து செய்து அரசு போக்குவரத்துக்கழகத்தில் உள்ள தற்போதைய நடைமுறையிலேயே ஓட்டுநர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.