Tamil News
Tamil News
Friday, 07 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

திமுக வாக்குறுதி

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார். பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தபோது கொரோனா தமிழகத்தில் ஆக்கிரமித்து இருந்தது. அதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொரோனா சற்று தணிந்த பின்னர், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. ஆனால், இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

விசாரணை நடத்த அனுமதி

திமுக வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கொடநாடு கொலை வழக்கிற்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆனால், அதற்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று சில நாட்களே ஆனநிலையில், தற்போது அவர் மீது விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

2017 - 2021 காலகட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகவும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தபோது 11 மருத்துவக் கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறை கேட்டது. இதனையடுத்து, முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை கூறிய நிலையில் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே, முன்னாள் அமைச்சர்கள் மீது முறைகேடு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியும் அதற்கு தீர்வு காணப்படாத நிலையில், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருப்பது, இந்த வழக்கிற்காவது தீர்வு காணப்படுமா என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.