Tamil News
Tamil News
Saturday, 08 Apr 2023 00:00 am
Tamil News

Tamil News

காவிரி டெல்டா பகுதியில் 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நிலக்கரி எடுக்க டெண்டர்

காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுப்பது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசின் நிலக்கரி சுரங்கத்துறை பல்வேறு நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியது. 

நிலக்கரி எடுக்க திட்டமிடப்பட்ட பகுதிகள்

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 ஆகிய 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்து நெய்வேலிக்கு அருகே ஆண்டுக்கு 1.15 கோடி டன் நிலக்கரி எடுக்கும் 3-வது மிகப்பெரிய சுரங்கத்தை ரூ. 3,556 கோடி செலவில் அமைக்க என்.எல்.சி இந்தியா நிர்வாகக் குழுவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதி அன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதற்காக 12,125 ஏக்கர் உட்பட மொத்தம் 25,000 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி கையகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரி படுகையை ஒட்டியே அமையவுள்ளது. ஐந்தாவதாக வீராணம் நிலக்கரித் திட்டம், ஆறாவதாக பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம், ஏழாவதாக சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், எட்டாவதாக தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரித் திட்டம், ஒன்பதாவதாக அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் ஆகியவை மத்திய அரசின் திட்டத்தில் இருந்தன.

இவற்றில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 3 நிலக்கரி திட்டங்கள் தவிர, மீதமுள்ள 6 திட்டங்களுக்காக மட்டும் குறைந்தது 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப் படத்தும் நிலை இருந்தது. இவற்றில் வீராணம், பாளையம்கோட்டை, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே, வடசேரி ஆகிய 4 திட்டங்கள் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு டெண்டர் விட்டுருப்பதை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனை முன்னிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

டி.ஆர்.பி.ராஜா கண்டனம்

நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகவும், நிலக்கரி சுரங்கம் டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை ஏலம் விடும் செயல் என்று சட்டமன்றத்தில் தீர்மானத்தின்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்திருந்தார்.  

எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ்

இதனைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, நிலக்கரி சுரங்கம் அமைக்கும் டெண்டரை உடனடியாக நிறுத்த மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது என்றும்,  மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் திட்டத்தை மேற்கொள்வது கண்டனத்துக்குரியது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.  

முதலமைச்சரின் பதில் 

இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "புதிய நிலக்கரி சுரங்க விவகாரத்தை பற்றி அறிந்தவுடன் நான் அதிர்ச்சிக்குள்ளானேன். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன். எனது கடிதத்திற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என ஒன்றிய அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி கிடையாது

புதிய நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தது. நானும் டெல்டா மாவட்ட பகுதியை சேர்ந்தவந்தான். எந்த காரணத்தை கொண்டும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்படமாட்டாது. நிச்சயம் உறுதியாக இருப்பேன். மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களுக்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அனுமதி அளிக்காது, அளிக்காது" என்று கூறினார்.

திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு

இந்நிலையில் இன்று காலை தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் புதியதாக நிலக்கரி எடுக்கும் பணியை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். 

விவசாயிகள் வரவேற்பு

மத்திய அரசின் இந்த அறிவிப்பை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகள் வரவேற்றுள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.