Tamil News
Tamil News
Sunday, 09 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஆன்லைன் தடை மசோதாவும் - ஆளுநர் ஒப்புதலும் 

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து உயிரிழப்புகள் அரங்கேறி வந்தன. தொடர் உயிரிழப்புகளால் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் கண்டனக்குரல் எழுந்தன. அந்தவகையில், கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து மார்ச் 06-ம் தேதி மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பின்னர் அதுகுறித்து விளக்கம் கேட்டார். அதன்பிறகு, ஆன்லைன் ரம்மி குறித்து ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரையிலும், ஆன்லைன் தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தநிலையில், தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடும் நபர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்க தடை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு நிராகரிப்பதாக பொருள் என்றும், அரசியலமைப்பின்படி, அரசியலமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை என்றும் கடந்த 6-ம் தேதி ஆளுநர் மாளிகையில் மாணவர்கள் மத்தியில் பேசியிருந்தார். ஆளுநரின் இந்த பேச்சிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தநிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தனர். தீர்மானம் நிறைவேற்றி சில மணி நேரங்களில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.