18 குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் மருத்து… இந்திய நிறுவனத்தை குற்றம் சாட்டும் உஸ்பெகிஸ்தான் அரசு!

Doc Max 1

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

“DOC-1 MAX”

நொய்டாவின் மரியோன் பயோடெக் நிறுவனம்  “DOC-1 MAX” என்ற இருமல் தயாரித்து வருகிறது. இந்த மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் தகவல் தெரிவித்துள்ளது. மருந்தில் இருந்த எத்திலீன் கிளைகோல் என்ற வேதிப்பொருள், உயிரிழப்புக்கு காரணம் என ஆய்வில் தெரிவந்ததாகவும் கூறப்படுகிறது.

உஸ்பெகிஸ்தான் அறிக்கை

இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max என்ற இருமல் மருந்த உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருந்து இந்தியாவின் நொய்டா நகரில் உள்ள மேரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை நாங்கள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதில் எத்திலின் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக 2 முதல் 7 நாட்கள் வரை அன்றாடம் 2.5 ml முதல் 5 ml அருந்தியுள்ளனர். அன்றாடம் மூன்று முதல் 4 முறை இந்த மருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மருந்துக்கடைக்காரர்கள் பரிந்துரையின்படி பெற்றோர் இந்த மருந்தினை குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளனர். இதனையடுத்து நாட்டில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் இருந்து Doc-1 Max மருந்தை அரசு திரும்பப்பெற்றுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காமல், நிலை குறித்து ஆராய தவறிய 7 பேரை பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.