உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு… எதற்காக தெரியுமா?

udhayanidhi Stalin

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் கடந்த 2021 ஏப்ரல் 6 ஆம் நடைபெற்றது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கவிழ்ந்து, மக்களின் பேராதரவுடன் திமுக வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார்.

இந்தத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

Udhayanidhi Stalin makes victorious poll debut in Chepauk-Thiruvallikeni |  The News Minute

இந்த நிலையில், உதயநிதியை எதிர்த்து நின்று தோல்வி அடைந்த தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி உதயநிதியின் வெற்றி குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தல் வேட்பு மனுவில் அவர் தவறான மற்றும் பொய்யான தகவல்களை கொடுத்துள்ளார். 

குறிப்பாக தனது வேட்பு மனுவோடு இணைத்து வழங்கும் படிவம்-26 இல் தன் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்று உதயநிதி கூறியுள்ளார். ஆனால் அந்த தகவல் தவறானது. ஏனெனில் உதயநிதி மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவர் வேட்பு மனுவில் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது உதயநிதியின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என முறையிட்டு வலியுறுத்தினேன். ஆனால், எந்த பயனும் இல்லை. இந்த விதிமீறல் புகாரை புறந்தள்ளிவிட்டு உதயநிதியின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக் கொண்டார். எனவே உதயநிதி வேட்புமனுவை ஏற்றது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தவறானது. இதனால் அவர் தேர்தலில் பெற்ற வெற்றியும் முறைகேடானது. எனவே உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று எம்.எல்.ரவி அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.