பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? பள்ளிக்கல்வித்துறை பச்சைக்கொடி.! 

scol

5 ஆண்டுகள் கடந்த 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் கடந்துவிட்டது. 2018-2019-ல் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதற்கு ஒரு சில காரணங்கள் சொல்லப்பட்டன. அதாவது, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பள்ளிகள் சரிவர கவனம் செலுத்துவதில்லை, முக்கியமாக, தனியார் பள்ளிகள் முழுமையாக 11-ம் வகுப்பு பாடங்களை நடத்துவதில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. 

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துவிடலாமா?

11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்திய பிறகு, மாணவர்கள் தொடர்ச்சியாக 10,11,12 ஆகிய 3 வகுப்புகளிலும் பொது தேர்வுகளுக்கு தயாராக வேண்டிய நிலையில், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்று கல்வியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து ஆசிரியர்களை ஈடுபடுத்தப்படுவதாகவும், தொடர் பொதுத்தேர்வுகளால் தேர்வுத்துறைக்கு பல கோடி ரூபாய் செலவு ஏற்படுவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. 

மேலும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தாலும்கூட, மாணவர்கள் 12-ம் வகுப்பை தொடரலாம் என்ற அறிவிப்பும் இருந்தது. 11-ம் வகுப்பில் அதிக மாணவர்கள் தோல்வியுறுவதால், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துவிடலாம் என்ற கோரிக்கை அண்மைக் காலமாகவே ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

பள்ளிக்கல்வித்துறை பச்சைக்கொடி

அண்மையில் மாநில கல்விக்கொள்கை உருவாக்கும் குழு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தக்குமார் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துவிடலாமா என்ற கருத்தை அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். இந்தநிலையில், வரும் கல்வியாண்டு வரும் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. இந்தநிலையில், 2023-2024 கல்வியாண்டில் மேற்குறிப்பிட்ட காரணங்களால், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துவிடலாம் என்ற ஆலோசனை மீண்டும் தொடங்கியிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கோரிக்கை பள்ளிக்கல்வித்துறை தரப்பில் அரசுக்கு கோரப்படுவதாக தெரிகிறது. 

மாணவர்களுக்கு மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய, தேர்வுத்துறை பச்சைக்கொடி காட்டிவிட்டது. அனைத்தையும் கருத்தில் கொண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய தேர்வுத்துறை தமிழக அரசுக்கு வலியுறுத்தியிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து, இனி வரும் காலங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு இருக்கும் என்றும், இதுபற்றியான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.