சிறார்களை பணியில் அமர்த்தும் ஆவின் - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

ttv

தொழிலாளர்கள் சட்டத்தை மீறி ஐஸ்கிரீம் தயாரிப்பு பிரிவில் சிறார்களை பணியில் அமர்த்தியுள்ளதாக அமமுக பொதுச் செயலாளார் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஒப்பந்த பணியாளர்களாக குழந்தை தொழிலாளர்கள்

அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பொருட்கள் தயாரிப்பு பண்ணையில் ஒப்பந்தப் பணியாளர்களாக 50க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தங்களை ஒப்பந்தம் மூலம் ஆவினில் பணியமர்த்திய நிறுவனம் முறையான சம்பளம் வழங்கவில்லை என சிறார்கள் ஆவின் பண்ணை முன்பு கொளுத்தும் வெயிலில் போராட்டம் நடத்தியதன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தொழிலாளர் சட்டத்தை மீறி இரண்டு மாதமாக ஐஸ்க்ரீம் தயாரிப்பு பிரிவில் பேக்கேஜிங் (PACKAGING) பணியில் சிறார்களை ஒப்பந்த நிறுவனம் மூலம் ஆவின் நிறுவனம் பணியில் ஈடுபடுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது போல ஆவின் நிறுவனத்துக்கும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்படுவதுடன், இதனை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

கல்விக்கான சூழல்

மேலும், சிறார்களுக்கு உரிய சம்பளம் வழங்க உத்தரவிடுவதுடன், அவர்கள் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்த தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.