நடிகரும் இயக்குநருமான மனோபாலா காலமானார்.. திரை பிரபலங்கள் இரங்கல்.!

manobala

 

கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் இயக்குநருமான மனோபாலா இன்று அவரது வீட்டில் காலமானதையடுத்து, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
கல்லீரல் பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் மனோ பாலா சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, கடந்த 15 நாட்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், இன்று (03.05.2023)  அவரது வீட்டில் காலமானார். இதனால் திரைபிரபலங்கள் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.   

பன்முகத்தன்மை கொண்ட மனோ பாலா 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தன்னுடைய தனி உடல்நடையின் மூலம் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

1982-ம் ஆண்டு முதல் இயக்குநரான மனோ பாலா, ஆகாய கங்கை- (1982), நான் உங்கள் ரசிகன்- (1985), பிள்ளைநிலா- (1985), பாரு பாரு பட்டினம் பாரு- (1986), தூரத்துப் பச்சை- (1987), ஊர்க்காவலன்- (1987), சிறைப்பறவை- (1987), என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்- (1988),  மூடு மந்திரம்- (1989),  மல்லுவேட்டி மைனர்- (1990),  வெற்றி படிகள்- (1991),  மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்- (1991), செண்பகத் தோட்டம்- (1992),  முற்றுகை- (1993),  பாரம்பரியம்- (1993), கருப்பு வெள்ளை- (1993), நந்தினி- (1997),  அன்னை- (2000), சிறகுகள்- (2001) (தொலைக்காட்சித் திரைப்படம்), நைனா-(2002) உள்ளிட்ட 20 திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

மனோபாலாவின் மறைவிற்கு இயக்குநர் பாரதிராஜா, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். "என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்" என்று இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். "பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் ஊர்க்காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மனோபாலா அரண்மணை, துப்பாக்கி, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். ஆகாய கங்கை எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி,விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வந்ததையடுத்து,தற்போது தமிழ் சினிமாவில் தன்னுடைய பங்களிப்பை முடித்திருக்கிறார்.