நடிகர்கள் மக்களை ஹைஜாக் செய்துவிடலாம் என நினைத்து அரசியலுக்குள் வருகின்றனர்.. திருமாவளவன் சாடல்.!

thiruma vijay

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அரசியலுக்குள் இன்னமும் வரவில்லை என்றாலும், விஜய் மக்கள் செயல்பாடுகள் மூலம் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை வெளிப்படுத்தி வருகிறார். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டாலும், கடந்த சில தினங்களாக விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் தற்போது நடிகர் விஜயைப் பற்றி அரசியல் களத்தில் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. 

அதனடிப்படையில் தான், அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர் அரசியல் வருகை பற்றி தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் விஜய் கல்வி விருது விழாவில், பெரியார், அம்பேத்கர் குறிப்பிட்டு பேசியதை மேற்கோள் காட்டி அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று பேசிய விசிக தலைவர் திருமாவளவன், இன்று நடிகர் விஜய் அரசியல் வருகை பற்றி கடுமையான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். 

சென்னையில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "பொது வாழ்வுக்கு எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் வரலாம். மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும். கருத்தியல் சார்ந்த களப்பணியாற்றி அரசியலுக்கு வரலாம், நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும், வரவேற்கிறோம் என்று பேசினார். 

மேலும், கேரளாவில் நடிகர் மம்முட்டி, கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் என பலர் சினிமா புகழை பயன்படுத்தவில்லை எனவும், தமிழகத்தில் மட்டும்தான் மார்க்கெட்டை இழக்கும் நேரத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர நினைக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும் என நடிகர் விஜய் கூறியதை வரவேற்கிறோம். மார்க்கெட் இழந்தவர்கள் அரசியலுக்கு வந்து மக்களை கவர்ந்து விடலாம் என நினைக்கின்றனர் என்றும், மக்களுக்கு பணியாற்றி சிறைக்கு சென்றவர்களை ஓரம் கட்டி விட்டு மக்களை ஹைஜாக் செய்துவிடலாம் என நடிகர்கள் நினைக்கின்றனர்" என்றும் பேசியிருக்கிறார்.