அதிமுக பொதுக்குழு தீர்மானம்.. தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.!

r1

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுவை எடப்பாடி கூட்டினார். அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தும், ஓபிஎஸ் மற்றும் அவரது தர்ப்பினர்களான மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. 

இது தொடர்பான வழக்கு முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கினார். இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு இபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு சென்றது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது செல்லும் என தீர்ப்பு அளித்தது. அதேநேரத்தில் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சிவில் நீதிமன்றம் முடிவு செய்யும் எனவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி, ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். அந்த வழக்கு இன்று (மார்ச்-03) விசாரிக்கப்பட்டது.

அந்த மனுவில் ஈபிஎஸ்-ஐ இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் இன்று விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது.

அப்போது, மனோஜ் பாண்டியன் தரப்பில், கட்சி நிறுவனரின் கொள்கைகளுக்கு விரோதமாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், கட்சி விதிகளுக்கு விரோதமாக, எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் வாதிடப்பட்டது. கட்சி விதிப்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், பொதுக்குழுவுக்கு அந்த அதிகாரம் இல்லை எனவும் மனோஜ் பாண்டியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால், எதிர் தரப்பினரின் விளக்கங்களைக் கேட்காமல், தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சியினர் ஒற்றைத் தலைமையை விரும்பினார்கள் எனக் கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் மனோஜ் பாண்டியன் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், எதிர்தரப்பினரின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என, பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, மார்ச் 15ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி, அதிமுக கட்சி, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.