திமுகவில் இணைந்த அதிமுகவின் முக்கிய புள்ளி ..!!!

m.k.stalin - kovai selvaraj

அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் பொறுப்பு வகித்தவர் கோவை செல்வராஜ். அதிமுகவின் முக்கிய புள்ளியான இவர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனபிறகும் அதேபொறுப்பில் தொடர்ந்து அங்கம் வகிந்து வந்தார். இந்நிலையில் தான் எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளால் கட்சி இரண்டாக பிளவுபட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு பிரிவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு பிரிவும் பிளவுபட்டது. ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவாளர்களும் ஈபிஎஸ் ஆதரவாளர்களும் வன்முறையில் குதித்த சம்பவமும் அரங்கேறியது. 

சட்டமன்றத்தில் நிகழ்ந்த இருக்கை பிரச்சனை

சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் பதவி வகித்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது, எதிர்கட்சி தலைவர் இருக்கையும் துணை தலைவர் இருக்கையும் அருகருகே அமைக்கப்பட்டதால், எடப்பாடி தரப்பு சட்டமன்றத்தில் சபாநாயகரை எதிர்த்து கோஷம் எழுப்பியது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி தரப்பு கூட்டுத் தொடரை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டது. எடப்பாடி தரப்பில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஒன்றிணைய, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைத்தியலிங்கம் எம்.எல்.ஏ, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ, கோவை செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒன்றிணைந்தனர். 

சலசலப்பை ஏற்படுத்திய பெயர் பலகை சம்பவம்

இந்நிலையில், முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டியபோது, இபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜும் பங்கேற்றனர். அப்போது கோவை செல்வராக் இருக்கையில் இருந்த அதிமுக பெயர் பலகையை ஜெயக்குமார் எடுத்து தனது பக்கம் வைத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. 

அதிமுகவிலிருந்து தற்போது திமுகவில்..!!

தொடர்ந்து இரு தரப்பினரும் மோதிக்கொண்டு வரும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் அதிமுகவிலிருந்து விலகுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த கோவை செல்வராஜ் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.