அதிமுக - பாஜக கூட்டணியும்.. அமித்ஷா - தம்பிதுரை சந்திப்பும்.. பின்னணி என்ன.!

website post - 2023-04-05T162452

அதிமுக - பாஜக சண்டை

அதிமுகவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அங்காளி பங்காளி சண்டைகள் நடந்து முடிந்து தற்போது ஒற்றைத் தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், மாமன் மச்சான் சண்டையும் ஆரம்பிக்கத் தொடங்கி இருக்கிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷத்திற்கு ஓரளவிற்கு முடிவு கிடைத்ததையடுத்து, அதிமுக பாஜக கூட்டணி பற்றியான மோதல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தாலும், எடப்பாடிக்கு குடைச்சல் நேர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக-வை கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு சிலரும், பாஜக-வால் அதிமுக-விற்கு பின்னடைவு தான் ஏற்படும் என்று கூட்டணியை வேண்டாம் என்று ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் குழம்பி வந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த நேரத்தில் பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி அதிமுகவில் இணைந்ததையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி வெளிப்படையாக விரிசல்விடத் தொடங்கியது. பாஜகவினர் அதிமுகவை விமர்சனம் செய்வது, எடப்பாடி உருவப்படம் எரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளால் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கொதித்தெழுந்தனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை வெளிப்படையாகவெ விமர்சனம் செய்து வந்தார். இந்த விரிசல் எடப்பாடிக்கும் தமிழக பாஜக தலைமைக்கும் இடையேயானது என்று ஒரு சில பத்திரிக்கையாளர்கள் தெரிவித்து வந்தனர். 

தம்பிதுரை உள்துறை அமைச்சரை சந்திப்பதற்கான காரணம்

இன்று அதிமுக எம்.பி. தம்பிதுரை உள்துறை அமைச்சரை சந்தித்திருப்பதற்க்கான காரணத்தை இதற்கு முன்னாள் நடந்த அதிமுக - பாஜக இடையே ஏற்பட்ட கருத்து மோதல்களை பார்க்க வேண்டியிருக்கிறது. முதலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக கூட்டணி பற்றி தடாலடியாக பேசியதை பார்க்க வேண்டும். அண்ணாமலை, தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாமல் தனித்து போட்டியிட்டால் தான் பாஜக வளரும் எனவும் கூட்டணி வைத்தால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றும் பேசியிருந்தார். மேலும், கூட்டணிக் கட்சித்தலைவர்கள் பாஜக வளர்ந்து வருவதை விரும்பவில்லை. யாரும் அவர்கள் கட்சியை வளர்க்க நினைப்பார்கள். கூட்டணி கட்சியை வளர்க்க நினைக்க மாட்டார்கள். பாஜக-வை வளர்க்க வேண்டும் என்று நினைக்க மாட்டாங்க. நானும் இங்கிருந்து கொண்டு கூட்டணி கட்சியை வளர்க்கனும் என்று நினைக்க மாட்னே். இங்கிருந்து இன்னொரு கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் நான் முட்டாள். அரசியலைப் பொறுத்தவரை என்னுடைய தீர்க்கமான நம்பிக்கை நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.  

மேலும், தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டு குனிந்து செல்ல விரும்பவில்லை என்றும், பாஜக-வை வலுப்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பேசினார். மேலும், கூட்டணிக்காக இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு யாருக்கும் சலாம் போட மாட்டேன் என்றும், மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன் என்று பேசியிருந்தார். இதுமட்டுமல்லாமல் திராவிடக் கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்தால் தலைவர் பதவியிலிருந்து விலகி சாதாரண தொண்டனாக பயணிப்பேன் என்றும் பேசியிருந்தார். 

இந்தநிலையில் அதிமுக - பாஜக கூட்டணி பற்றி அறிவிப்பு செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர் கூட்டணி குறித்து பேசியதாவது; "எங்கெல்லாம் பாஜக வலிமை இல்லாமல் இருந்ததோ அங்கெல்லாம் நாங்கள் சென்று சேர்ந்து இருக்கிறோம். நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம்", என்று அமித் ஷா பேசியிருந்தார். 

உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி பற்றி பேசினார். இது அண்ணாமலைக்கு கொடுத்த பதிலடி என்று பத்திரிக்கைகள் எழுதத் தொடங்கின. எடப்பாடி அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் தான் இருக்கிறது என்று தேசிய தலைமையே சொல்லிவிட்டது. கூட்டணி பற்றி தேசிய தலைவர்கள்தான் முடிவெடுப்பார்களே தவிர, மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல என்று அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார். 

இப்படிப்பட்ட தமிழக அரசியல் சூழலில் சுழன்று கொண்டிருக்கும் அதிமுக - பாஜக, தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சரை அதிமுக எம்.பி. தம்பிதுரை கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும்போது கூட்டணி குறித்து இப்போதே முதலுரையும், முடிவுரையும் எழுத முடியாது என்று அண்ணாமலை பேசியிருந்தநிலையில், தற்போது டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்திருப்பது அண்ணாமலையின் கருத்துக்களை மத்திய தலைமை பொருட்படுத்தவில்லையா என்ற கேள்வி எழுகிறது.