அதிமுக - பாஜக கூட்டணி ஒர்க் அவுட் ஆகாது.. கே.எஸ். அழகிரி திட்டவட்டம்.!

ks

இபிஎஸ் அண்ணாமலை மோதல்

கடந்த சில தினங்களாகவே அதிமுகவிற்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. சி.டி.ஆர்.நிர்மல்குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததையடுத்து, அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி மீது கோவம் இருந்து வந்தது. இதைவைத்து அதிமுகவை பொதுவெளியில் வெளிப்படையாக விமர்சனம் செய்து வந்தார் அண்ணாமலை. இதையடுத்து, கூட்டணி பற்றி முடிவெடுப்பது நீங்கள் அல்ல, மேலே இருப்பவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலை கருத்துக்கு பதிலடி கொடுத்து வந்தார். 

எங்களுக்குள் எந்தவித மோதலும் இல்லை

இந்தநிலையில், கடந்த மாதம் டெல்லியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருசில அமைச்சர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே உள்ள கருத்து மோதலை தீர்த்து வைத்தார் அமித்ஷா. இதையடுத்து, அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்தவித மோதலும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக - அண்ணாமலை மோதல்

இதையடுத்து, அதிமுக மற்றும் அண்ணாமலைக்குமான மோதல் மறுபடியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அண்ணாமலை பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டியில் அண்ணாமலை, தமிழகத்தில் ஆட்சி நடத்திய கட்சிகள் ஊழலில் ஈடுபட்டதாக பேசியிருந்தார். அப்போது, அதிமுக குறித்தும் பேசுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, பொதுமக்களின் பணத்தை முறைகேடு செய்த எந்த ஒரு கட்சியையும் நான் சொல்கிறேன். அது எல்லாக் கட்சிக்கும் பொருந்தும் என்றார். 

அதேபோல், 1991-96 வரையில் இருந்த அதிமுக ஆட்சி ஊழல் குறித்து மிகவும் விமர்சிக்கப்பட்டது. அதுபற்றிய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அண்ணாமலை, இங்கே இருக்கும் ஆட்சி எல்லாமே ஊழல் செய்யும் ஆட்சியாகத்தான் உள்ளது. முன்னாள் முதல்வரே ஊழல் காரணமாக தண்டிக்கப்பட்டு இருக்கிறார் என்று ஜெயலலிதா குறித்து விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துக்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். இது பாஜக மற்றும் அதிமுக மோதல் மறுபடியும் தொடங்கிவிட்டது என்றெ பார்க்கப்பட்டது. அதிமுகவிற்கும் அண்ணாமலைக்குமான மோதல் போக்கு 2024-ல் அதிமுக பாஜக கூட்டணி தொடருமா என்று பல்வேறு கோணத்தில் பார்க்கப்பட்டது. 

பாஜக கூட்டணி முறிகிறதா

இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜுன் 18-ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அதிமுக நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. அதற்காக அரும்பணி ஆற்றிவருகிறோம். 40 இடங்களில் அதிமுக வெற்றி பெறுவதற்கான சூழல் பிரகாசமாக இருக்கிறது" என்று பேசியிருந்தார். மேலும், அமித்ஷா கூட்டணி பற்றி பேசியது, அது அவருடைய கருத்து என்று சிரித்துக்கொண்டே பதிலளித்திருந்தார். இபிஎஸ்-ன் இந்த கருத்து அதிமுக பாஜக கூட்டணி முறிகிறதா என்ற கேள்வி எழுந்தது.

அதிமுக - பாஜக கூட்டணி நடைமுறை சாத்தியமில்லை 

இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அதிமுக பாஜக கூட்டணி பற்றி பேசியிருக்கிறார். அதில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அண்ணமலை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார். எடப்பாடிக்கும் மற்றவர்களுக்கும் பிரச்னை இருக்கலாம். ஆனால், அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை குறை சொன்னவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, அவர்களுக்குள் கூட்டணி வருவது என்பதே நடைமுறை சாத்தியமில்லை. வந்தாலும் அந்த கூட்டணி ஒர்க் அவுட் ஆகாது, வேலை செய்ய மாட்டாங்க. அவர்கள் 25-ல இல்ல, 250 தொகுதிகளில் நின்னாலும் வெற்றி பெற மாட்டாங்க" என்று பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.