மாநில மாநாடு நடத்த முடிவு... ஆலோசனைக் கூட்டத்தில் இபிஎஸ் அதிரடி.!

edappadi

இபிஎஸ் தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விரைவில் மாநில அளவிலான மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

ஆலோசனைக் கூட்டம்

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (டிச.27) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பொது செயலாளர் பதவி 

இக்கூட்டத்தில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள அதிமுக பொது செயலாளர் தொடர்பான வழக்கு, ஜனவரி 9 ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்காதது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

அரசியலில் போலியானவர் ஓபிஎஸ்

ஓபிஎஸ் கட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை என்று நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளது மீண்டும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆலோசனை கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன், ”பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம். அதுபோல் அரசியலில் போலியானவர் ஓபிஎஸ் கட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும்” என்று தெரிவித்தார்.

அதிமுக மாநில மாநாடு

இந்நிலையில், மாநில அளவில் மிகப்பெரிய மாநாடு நடத்த இபிஎஸ் தரப்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான கட்சி ஏற்பாடுகளில் அதிமுகவில் ஈடுப்பட வேண்டும் என்றும், மாநில அளவிலான மிகப்பெரிய மாநாட்டை நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.