அதிமுக பொதுக்குழு வழக்கு – இன்றாவது தீர்ப்பு வருமா? 

AIADMK

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. 

அதிமுக சர்ச்சை 

இரட்டை தலைமைக் கொண்டிருந்த அதிமுக, ஆட்சியில் இருந்த போது எந்த சிக்கலும் இல்லாமலே இருந்தது. ஆனால் அதிமுக எதிர்க்கட்சி ஆன பிறகு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி தற்போது அதிமுக யாருக்கு சொந்தமானது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தனர். ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆளுக்கொரு பக்கம் தங்கள் தலைவர்களை ஆதரித்து கட்சிக்குள்ளேயே பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து ஒற்றை தலைமை சர்ச்சை தொடர்ந்து நிலவியது. 

அதிமுக பொதுக்குழு 

ஜூன் 23 ஆம் தேதி நடந்த அதிமுக கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் ரத்தி செய்யப்படுவதாக இபிஎஸ் குழு அறிவித்தது. 
இதனைத் தொடர்ந்து ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டியது இபிஎஸ் தரப்பு. அந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அதிமுகவின் கொள்கைகளுள் ஒன்றை திருத்தி எழுதி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தை பெற்ற இபிஎஸ். 

ஓபிஎஸ் வழக்கு

இபிஎஸ் நடத்திய  இப்பொதுக் குழு கூட்டத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன்,”ஜூலை11 அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது; அதிமுகவில் ஜூன் 23-ந் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இபிஎஸ் எதிர்ப்பு

ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வந்த இந்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்தார். இபிஎஸின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, ”நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. அத்துடன் ஜூலை 11 ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லும்” என்று அதிரடியான தீர்ப்பை வழங்கினர். 

உச்சநீதிமன்ற சென்ற ஓபிஎஸ்

இபிஎஸிற்கு ஆதரவாக தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து இபிஎஸ் தரப்பு கேவியட் மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. கடந்த விசாரணையின்போது, அதிமுக பொதுக்குழு வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைத்தனர். இதுபோன்று, தேர்தல் ஆணையம் தொடர்பாக எடப்பாடி தொடர்ந்த இடைக்கால மனுவை விசாரிக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இன்று மீண்டும் விசாரணை

கடந்த 12-ஆம் தேதி விசாரிக்கப்பட்டிருந்த மனு அலுவல் நேரம் முடிந்ததை அடுத்து வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்ப்பு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இம்முறை, அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.