அண்ணாமலைக்கு எதிராக அதிமுக தீர்மானம்.! 

website post (9)

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

பின்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில், ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், 

"அஇஅதிமுக காவல் தெய்வமும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்களின் மனதிலும் மக்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்து வாழும் தெய்வமாக விளங்கிக்கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்கள், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழுக்கும் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு கருத்தை பேட்டியாக கொடுத்துள்ளார். 

இதனால், தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் மனவேதனையும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய் மற்றும் அத்வானி மற்றும் மற்ற மாநில முதலமைச்சர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள், புரட்சித் தலைவி அம்மா அவர்களை பல தலைவர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புரட்சித்தலைவி மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். 

1998-ல் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற அம்மா அவர்கள் மூலக்காரணமாக இருந்தவர். மேலும், 20 ஆண்டு காலமாக தமிழக சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாதநிலையில், 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்தவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் 14 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்து தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு அரும்பாடு பட்டவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். 

தேசிய அளவில் முன்னோடி திட்டங்களை வழிகாட்டியவர் அம்மா அவர்கள். இத்தகைய போற்றுதலுக்குரிய புரட்சித் தலைவி அம்மா அவர்களை பொதுவெளியில் எந்தவித முதிர்ச்சியும் இல்லாத தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு பொதுவெளியில் உள்நோக்கத்தோடு பேட்டி அளித்ததற்கு அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்."