தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதித்திடுக.. யூஜிசி பல்கலைக்கழகங்களுக்கு வலியுறுத்தல்.!

szdcx

தாய் மொழி கற்றலை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தி மத்திய பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி தலைவர் ஜெகதேஷ்குமார் கடிதம் எழுதியிருக்கிறார். 

தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதித்திட வேண்டும்

மத்திய தேர்வுகளில் தாய்மொழி இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது வரைக்கும் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, யூபிஎஸ்சி, நீட், கியூட் உள்ளிட்ட தேர்வுகளில் மாணவர்களின் அவரவர் தாய்மொழிகள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது இருந்து வருகிறது. இந்தநிலையில், தற்போது அவரவர் தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதித்திட வேண்டும் என்று யூஜிசி தலைவர் ஜெகதேஷ்குமார் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் எழுதியுள்ள கடித்ததில்,

ஆங்கிலத்தில் பாடம் நடத்தப்பட்டாலும் தாய் மொழியில் தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் தாய் மொழியில் கற்றல், கற்பித்தல் செயல்முறையை ஆதரிப்பதில் உயர்கல்வி நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் தெரிவித்திருக்கிறார். முக்கியமான நூல்களை அவரவர் தாய் மொழிகளில் மொழிபெயர்த்து கற்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். 

மேலும், ஆங்கிலத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் அனைத்து இந்திய மொழிகளிலும் பயிலும் மாணவர்களின் தாய் மொழிகளில் கற்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார். ஏற்கனவே, தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும் என ஒரு சில மாநிலங்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது யூஜிசி, தாய் மொழியில் தேர்வு எழுத பல்கலைக்கழகங்களை வலியுறுத்தியிருப்பது, அரசு தேர்வுகளிலும் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.