அமர்பிரசாத் ரெட்டி, சூர்யா சிவா சொல்லும் ரகசிய டீல்.. உண்மையா..கப்சாவா..?

website post (26)

தமிழ்நாடு பாஜகவில் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கும் உட்கட்சி மோதல்கள் குறித்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழக பாஜகவில் அண்ணாமலை தலைவராக பதவியேற்ற பின்பு, கட்சியில் இருந்த முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து விலகுவது தொடர் கதையாகி வருகிறது. கே.டி. ராகவன் தொடர்ந்து தற்போது திலீப் கண்ணன் வரை வெளியேறி இருப்பது தமிழக பாஜக உட்கட்சி விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். 

இந்தநிலையில், பாஜக தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் பாஜக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் திலீப் கண்ணன் கட்சியைவிட்டு விலகியிருப்பது அரசியல் களத்தில் பெரும் புழுதியை கிளப்பியிருந்தது. கட்சியை விட்டு விலகிய ஒரு சில மணி நேரத்தில் எடப்பாடி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். பாஜகவிலிருந்து அதிமுகவில் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் இணைந்தது முதல் அதிமுக - பாஜக கூட்டணி உரசல் ஏற்பட்டு இருக்கிறது. 

பாஜகவிலிருந்து விலகினாலும் அதிமுக இதை செய்திருக்கக்கூடாது என்று அதிமுகவை கடுமையாக சாடியிருக்கிறார் தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி. அதுமட்டுமல்லாமல் அதிமுகவிலிருந்து எங்கள் தலைவரிடம் நானே இரண்டு பேரை கூட்டிச் சென்றேன். அதில் ஒரு எம்.எல்.ஏ சிட்டிங் எம்.எல்.ஏ. என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதை நேரடி சவாலாக சொல்கிறேன் என்று பேசியிருக்கிறார். ஆனால், அப்போது என் தலைவர் என்னை கூப்பிட்டு இப்படியெல்லாம் செய்யக்கூடாது, கூட்டணி கட்சி, அரசியல் தர்மம் அப்படி செய்வது தவறு என்று மறுத்தார். ஆனால், இதே நிலை தொடர்ந்தால் அதிமுகவிலிருந்து அதிமுக நிர்வாகிகளை தூக்குவோம் என்று சவால் விட்டிருக்கிறார். 

இதனைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யாசிவா, சி.டி.ஆர். நிர்மல் குமாரை அதிமுகவில் இணைத்தது இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் தவறு என்று குறிப்பிட்டதுடன் அவரும் அதிமுக பற்றிய ரகசிய டீலிங் பற்றியும் கைமாறிய தொகைகள் பற்றியும் தடாலடியாக பேசியிருக்கிறார். 

சூர்யாசிவா சொன்னதாவது; "குறிப்பிட்ட வேலைகளை எடப்பாடி செய்து வருகிறார். பாஜகவில் பயணித்த முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை பெரிய தொகைகள் கொடுத்து வாங்குகிறார்கள். சி.டி.ஆர். நிர்மல்குமார் நேற்று இரவு வரைக்கும் மோடி அவர்களின் சாதனைகளை பேசிவிட்டு காலையில் அதிமுகவுடன் இணைந்ததாக செய்தி வருவதை பார்க்கும்போது, தொகைகள் கைமாறிய பிறகு அறிவிப்பு செய்திருக்கிறார் என்றுதான் நான் பார்க்கிறேன். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இரண்டு பேர் எனக்குமே பணம் தருகிறேன், நாடாளுமன்ற தொகுதி சீட் தருகிறேன் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது இவருக்கு யாரு தொகை கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, 10 கோடி கைமாறியது சாதாரண நிர்மல்குமாருக்காக கைமாறியது அல்ல, பாஜகவின் ஐடி விங் மாநில தலைவர் என்கிற அடிப்படையில் கொடுக்கப்பட்டது. சி.டி.ஆர். நிர்மல் குமார் ஒரு விலைபோன ஆடாகத்தான் நான் பார்க்கிறேன். என்னுடைய கோவம் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் மேல் இருப்பதைவிட எடப்பாடி பழனிசாமியின் மேல் தான் இருக்கிறது. எடப்பாடியின் செயல்பாடுகள் பாஜகவை எதிரியாக பார்க்கிறார் என்கிற கண்ணோட்டத்தில் தான் நான் பார்க்கிறேன் என்று அதிமுக ரகசிய டீலிங் பற்றியான தகவல்களை பொது வெளியில் பேசியிருக்கிறார். 

மேலும்,ஈரோடு கிழக்குத் தேர்தலில் நாங்கள் சொல்லவில்லையென்றால் ஓபிஎஸ் வாபஸ் செய்திருக்கமாட்டார். நாங்கள் இருந்ததால்தான் இரட்டை இலை சின்னம் கிடைத்தது. இரட்டை இலை இருந்தும் இவர்களால் ஒன்னும் கிழிக்க முடியவில்லை என்று அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் சூர்யா சிவா". 

சூர்யா சிவாவுக்கு எம்.பி. சீட் கொடுக்கிற அளவுக்கு அதிமுக இருக்கா என்பதை யோசிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி உரசலுக்கு பின் அதிமுக பற்றியான ரகசிய டீலிங் பொதுவெளியில் பேசிக்கொண்டிருக்கக்கூடிய சூழலில், அதை கேட்கக்கூடிய நிலையில் மக்கள் இருக்கிறார்கள். இது உண்மையா.. பொய்யா.. என்ற கோணத்தில் பார்க்கும்போது, அதற்கான விடையை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.