பாராளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி - டி.டி.வி.தினகரன் 

TTV Dhinakaran

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்கை அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமமுகவின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். 

மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

அமமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்றும் சென்னையில் டிடிவி. தினகரன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறினார். மேலும் அடுத்த கட்டமாக மாவட்டங்களுக்கு பயணம் செய்து அமமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நேரடியாக சந்திக்க இருப்பதாக கூறினார். மேலும் ஜெயலலிதாவின் தொண்டர்களை ஒன்றிணைத்து, தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்பதே அமமுகவின் லட்சியம் என தெரிவித்தார். 

2024 மக்களவைத் தேர்தல் 

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், 2024ம் ஆண்டு தேர்தலில் அமமுக போட்டியிடும் என தெரிவித்தார். மேலும் கூட்டணிக் குறித்து பேசிய அவர், தேசிய கட்சிகளான பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து அமமுக போட்டியிட முயற்சி செய்யும் என தெரிவித்தார். மேலும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படாவிட்டால், அமமுக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என தெரிவித்தார்.