திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிடப்போகும் அண்ணாமலை... யார் அந்த 27 புள்ளிகள்.!

website post (28)

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றைக்கு முந்தைய தினம் டெல்லிக்குச் சென்று, பாஜகவின் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பிய நிலையில், நேற்றைய தினம் தென்காசியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, திமுகவின் 27 புள்ளிகளின் ஊழல், சொத்து பட்டியலை வெளியிடப்போகிறோம், அன்றைக்கு இருக்கிறது கச்சேரி என ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.

27 புள்ளிகள்

பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை; "நான் விடப்போகிற சொத்துப்பட்டியல் மொத்தமாக திமுகவினுடைய 27 புள்ளிகள். அவர்களுடைய சொத்து மதிப்பு மட்டுமே 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய். தமிழகத்தின் மொத்த வருமானத்தின் 10 சதவிகிதம் திமுக-வில் இருக்கக்கூடிய 27 புள்ளிகள் கைகளில் இருக்கிறது. அந்த 27 பேர்களில் சிலபேர் அமைச்சர்கள், சில பேர் மந்திரி, சில பேர் முன்னாள் மந்திரி, சில பேர் எம்.எல்.ஏ. தமிழகத்தின் மொத்த ஜி.டி.பி. பத்து சதவீதத்தை அந்த 27 பேர் வைத்திருக்கிறார்கள். அவர்கள் செய்த ஒரே சாதனை உதயசூரியன் சின்னத்தில் ஜெயித்திருக்கிறார்கள். தேர்தலில் ஜெயித்த பிறகு சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் துபாயில் கம்பெனி நடத்துகிறான், கர்நாடக முழுவதும் டூ வீலர் சோரூம் வைத்திருக்கிறான், ஆப்பிரிக்காவில் கம்பெனி நடத்துகிறான், ஒருத்தன் லண்டனில் மனைவி பெயரில் கம்பெனி எழுதி வச்சிருக்கான் இதெல்லாம் ஏப்ரல் 14-ம் தேதி வரும். 

கச்சேரி இருக்கு

தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 ஒரு மாபெரும் திருவிழாவாக, ஊழலுக்கு எதிரான திருவிழாவாக இந்த ஆண்டு இருக்கும். அன்றைக்கு கச்சேரி இருக்கு. அன்றைக்கு குறிப்பாக ஒத்த செங்கல் திருடனுக்கு அன்றைக்கு இருக்கு. ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு அன்றைக்கு இருக்கு. அதன்பிறகு தமிழகத்தில் அரசியல் புரட்சி ஏற்படும். அப்போது டீக்கடைகளில் உள்ளவர்கள் பேசுவார்கள், பூக்கடை இருக்கக்கூடிய அம்மா பேசுவார்கள், ஆடு மாடு மேய்ப்பவர்கள் பேசுவார்கள், பேருந்தில் கண்டெக்டர்கள் பேசுவார்கள் எப்படி இவர்களுக்கு 2 லட்சத்து 24 ஆயிரம் பணம் வந்தது என்று. அதற்கு அப்புறம் இருக்கிறது பாஜகவின் அரசியல்" என ஆவேசமாகப் பேசியிருக்கிறார் அண்ணாமலை.

கலக்கத்தில் திமுக

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, வாட்ச் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு, திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் நேற்றைய பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை உறுதியாக பேசியதையடுத்து திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. 

சமீப காலமாக அதிமுக கூட்டணி தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், டெல்லியில் அமித்ஷா, ஜேபி நட்டா, பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று தமிழ்நாட்டுக்குத் திரும்பிய நிலையில், அண்ணாமலை பேச்சில் கூடுதல் வேகம் தென்படுகிறது. இனிவரும் காலங்களில் தமிழக அரசியல் சூடு தணியாமல் வெதுவெதுப்புடன் இருப்பதற்கு அண்ணாமலை எரியும் நெருப்பாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.