5 ராணுவ வீரர்கள் பலியான விவகாரம் - பழிவாங்கப்பட்டது என்ற இளைஞரின் பதிவால் பரபரப்பு

terrorists attack at kashmir

கையெறி குண்டுகள் வீசி தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள்  ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்  நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு, கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பூஞ்ச் சங்கியோடி பகுதிக்கு மாலை 3 மணியளவில் ராணுவ வாகனத்தில் வீரர்கள் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், இதில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் மரணமடைந்த நிலையில், ஒருவர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசியல் தலைவர்கள் கண்டனம் 

உயிரிழந்தவர்கள் பஞ்சாப்பைச் சேர்ந்த ஹவ் மன்தீப் சிங், எல்/என்கே குல்வந்த் சிங், செப் ஹர்கிரிஷன் சிங், செப் சேவக் சிங் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த எல்/என்கே தேபாஷிஷ் பஸ்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ராணுவம் தரப்பில் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்காக பயங்கரவாதிகள் எல்.ஓ.சி பகுதியில் முன் கூட்டி பதுங்கியிருந்தாகவும், திட்டமிட்டே இந்த சம்பவத்தை நிகழ்த்தியிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பழிவாங்குதல் நிறைவுபெற்றது

இந்நிலையில், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை குறிப்பிட்டு ”அட்டிக் அஹமதுவின்” பழிவாங்குதல் நிறைவுபெற்றிருப்பதாக அர்மன் அலி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மீது புகார் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு அட்டிக் அஹமது முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும், இதனை பதிவிட்ட அர்மன் அலிக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என்றும் பலரும் கூறிவருகின்றனர். இதனையடுத்து அர்மன் அலி தனது இன்ஸ்டாகிராம் கணக்கை pirivate க்கு மாற்றியுள்ள நிலையில், இது சமூக வலைதளங்களின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.