வடமாநில தொழிலாளர்கள் வருகையின் பின்னணியும்.. அரசியல் பின்னணியும்..!

not

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அண்மையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சாரை சாரையாக வந்திறங்கிய சம்பவம் ஒரு சாட்சி. வடமாநிலத்தவர்களின் வாழ்வாதார தேவையை தமிழ்நாடு பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது என்றே கூறலாம். இது ஒரு புறம் இருக்க, தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டு பன்னெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் இருந்துக் கொண்டிருப்பதும் இன்னொரு புறம்.

தன் வாழ்வாதாரத்திற்க்காக வேலை வாய்ப்பைத் தேடி வேறுவேறு மாநிலம் கண்டம் விட்டு கண்டம் இடம்பெயர்தல் என்பது உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தொழில்துறைக்கு போதிய அளவு மனித வளம் இல்லாமையால் வடமாநிலத்தவர்களின் வருகை அதிகமானது என்ற ஒரு சிலரின் பார்வையும், தமிழ்நாட்டில் இருக்கக் கூடியவர்கள் குறைந்த நேரத்திற்கு அதிக சம்பளம் கேட்கிறார்கள் ஆனால், வடமாநிலத்தவர்கள் குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரத்திற்கு வேலை செய்கிறார்கள் என்கிற தமிழ்நாட்டு தொழில் நிறுவனர்களின் பார்வையும் குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

திருப்பூர் பின்னலாடை தொடங்கி கட்டடத்தொழில், மேம்பாலங்கள், ஹோட்டல்கள், டீ கடைகள் என தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்பது நிதர்சனம். வடமாநிலத்தவர்களைவிட தமிழர்களுக்கு வேலை கொடுப்பது பற்றியான தேவை தொழில் நிறுவனர்களிடம் குறைவாகவே இருந்தது எனலாம். 
அப்படியென்றால் வடமாநிலத்தவர்களின் வருகைக்கு காரணம் தனியார் தொழில் நிறுவனங்கள்  ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

இடம்பெயர்ந்து வரும் வடமாநிலத்தவர்கள் தனியார் நிறுவனங்களில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் மத்தியஅரசுப் பணிகளிலும் தன் கால்தடங்களை பதித்து வருகின்றனர். குறிப்பாக அஞ்சல்துறை, வங்கி, ரயில்நிலையம் மற்றும் சுங்கச் சாவடி போன்ற துறைகளில் பணியமர்ந்துகொண்டு தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளையும் பெற்று வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் வாழும் பூர்வகுடிகளின் மத்திய அரசு வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுகிறது.

இதுவரை வடமாநில தொழிலாளர்களால் தமிழர்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டதுடன், கடந்த சில நாட்களாக வடமாநிலத்தவர்களால் உடல்ரீதியிலும் பாதிக்கப்பட்டிருந்தனர் தமிழர்கள். குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, கோவை மாவட்டம் சூலூர் தனியார் கல்லூரி உணவகத்தில் உருட்டுக்கட்டைகளுடன் தமிழர்களை விரட்டி விரட்டி தாக்கியதாக பகிரப்பட்ட வீடியோ தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதுமட்டுமல்லாமல், இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் தமிழர்களை ஓட ஓட விரட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இன்னும் சில தாக்குதல் சம்பவங்களால் வடமாநிலத்தவர்களின் மீதுள்ள பார்வை, தமிழ்நாடு அரசியல் களத்திலும் மக்கள் மத்தியிலும் எதிராக கிளம்பியிருந்தது. 

குறிப்பாக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை போன்ற கட்சிகள், மக்கள் மத்தியிலும் அரசியல் களத்திலும் வடமாநிலத்தவர்கள் பற்றிய வெறுப்பு அரசியலை பேசி வந்தனர். இந்த வெறுப்பு அரசியல் தமிழர்களுக்கும் வடமாநிலத்தவர்களுக்கும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே தாக்குதல் ஏற்பட காரணாமாகியிருக்கிறது. உதாரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக, திருப்பூர் அருகே பல்லடம் பேரூந்து நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வடமாநிலத்தவரை தாக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த வகையில் தமிழகத்தில் பணியாற்றும் பீகார் இளைஞர்கள், உள்ளூர் மக்களால் தாக்கப்படுவது போல இரு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. ஆனால் இந்த இரு வீடியோக்களும் போலியானது என்று தமிழக அரசு மறுத்துள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் பீகார் மாநிலத்தில் எதிரொலித்திருக்கிறது. அந்த மாநில பா.ஜ.க. சட்டசபையில் இந்த பிரச்சினையை கிளப்பியதோடு, தமிழகத்தில் பணிபுரிந்து வரும் பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் கடும் அமளியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வெளியான தகவலை அறிந்ததாகவும், தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் பேசி, அங்கு வசிக்கும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை  டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.

இதற்கு, தமிழ்நாட்டில் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று விளக்கமளித்த தமிழ்நாடு காவல்துறை, சமூக ஊடகங்களில் பரவியது வதந்திகள் என்று தெரிவித்தது. இதையடுத்து தமிழகத்துக்கு பீகாரிலிருந்து நான்கு பேர் கொண்ட குழு சென்று உண்மை நிலையை கண்டறியும் நிலைமையை தலைமை செயலாளர், டி.ஜி.பி. தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள், நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள், சமூக ஊடகங்களில் இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இந்த சமயத்தில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் ரயில் நிலையங்களில், தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பெருவாரியான வடமாநிலத்தவர்கள் கையில் பையுடன் கிளம்பி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது நிகழும் சூழல்களைப் பார்த்து நாங்கள் எங்கள் ஊர்களுக்குச் செல்கிறோம் என்று ஒரு சிலர் தெரிவித்தநிலையில், பெரும்பான்மையோர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஊருக்குச் செல்வதாகவும் நாங்கள் திரும்பி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். 

எது எப்படியோ, எந்த ஒரு சூழ்நிலையிலும், தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பதற்கு வடமாநிலத்தவர்களின் பாதுகாப்பிற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும், தற்போது முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையும் நிரூபனமாகும்.