ஆருத்ரா வழக்கு.. ஆர்.கே.சுரேஷ் கோரிக்கை நிராகரிப்பு.!

RK

மோசடி

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ளது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ளது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதந்தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தனர். அதாவது, 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்ற மோசடி விளம்பரம் செய்யப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 9,255 பேரிடம் ரூ 2,438 கோடி பணம் வசூலித்தது தெரியவந்தது.

ஆர்.கே. சுரேஷ்க்கு சம்மன்

இதையடுத்து, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அதிரடியாக சோதனை நடத்தினர். காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் முகவராக செயல்பட்ட தொழிலதிபரும் நடிகருமான ரூசோ கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவருடைய வங்கிக் கணக்கில் ரூ 1 கோடியே 40 லட்சத்தை முடக்கி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கில் கைதான நடிகர் ரூசோ அளித்த தகவலின் பேரில் ஆர்.கே. சுரேஷ்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. 

சம்மனை ரத்து செய்யக்கோரி வழக்கு

இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு நேரடியாக ஆஜராக இயலாது என ஆர்.கே.சுரேஷ் தெரிவித்திருந்தார். மேலும், ரூசோவுக்கும் தனக்கும் படம் தொடர்பாக பணபரிவர்த்தனை நடைபெற்றதே தவிர, ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது பழிவாங்கும் நோக்கத்தோடு செய்யப்பட்டிருப்பதால் இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 

கோரிக்கை நிராகரிப்பு

சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டநிலையில், தற்போது கோரிக்கையை நிராகரித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.