ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மீது தாக்குதல் - சாலை மறியலில் ஈடுபட்டோரை கைது செய்த காவல்துறை 

salem protest

லாட்டரி விற்பனை குறித்து புகார்

சேலம் மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் பெரியசாமி கடந்த வாரம் சமூக வலைதளங்களில் சில வீடியோ பதிவுகளை வெளியிட்டார். இந்த நிலையில் இன்று காலை பெரியசாமி மீது லாட்டரி விற்பனை கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியது. இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சாலை மறியலில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் பெரியசாமி மீது நிகழ்ந்த தாக்குதலை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது டவுன் காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் குண்டு கட்டாத தூக்கி வேனில் ஏற்றினர். இதனால் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

போராட்ட களம் போல் மாறிய பகுதி

இதன் காரணமாக ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு போராட்ட களம் போல் காட்சியளித்தது. இதனிடையே பெரியசாமியை தாக்கிய மூன்று பேரை அன்னதானப்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.