நேற்று நடந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஐம்பதாயிரம் பேர் ஏன் எழுதவில்லை.. பாஜகவினர் கேள்வி.!

website post (1) (5)

50,674 பேர் எழுதவில்லை

தமிழகத்தில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நடந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை எனப் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் முதல் தாள் தேர்வை பள்ளி மாணவர்கள் 49,559 பேரும், தனித்தேர்வர்கள் 1,115 பேரும் தேர்வு எழுத வரவில்லை எனப் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. 

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் முதல் தாள் தேர்விற்குப் பள்ளி மாணவர்கள் 8,51,303 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 8,01,744 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 49 ஆயிரத்து 559 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதுபோல் தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 901 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 7 ஆயிரத்து 786 பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். 1,115 பேர் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  

அவர்கள் ஏன் வரவில்லை

இந்நிலையில், நேற்று நடந்த தேர்வில் ஏன் அவர்கள் வரவில்லை என பாஜகவைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசை கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
 
ஏற்கனவே கல்வியில் நாட்டில் 27-வது இடத்தில் தமிழ்நாடு இந்த லட்சணத்தில் இன்று தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 42,400 மாணவர்கள் முதல் நாள் பரிட்சையை எழுத வரவில்லை இதுதான் திராவிட மாடல் ஸ்டாலின் அரசு. அவர்கள் ஏன் வரவில்லை அரசு விளக்கம் தரவேண்டும் என விளக்கம் கேட்டுள்ளார்.

எப்படி கணக்கிடுவீர்கள்

மேலும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு நேற்று நடந்த மொழித்தேர்வில் தேர்வு எழுதாதவர்களை எப்படி கணக்கிடுவீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; 

நேற்று நடந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 50,000 மாணவர்கள் வரவில்லை, அதுவும் மொழித் தாள். மொழித் தாள்களுக்கும் இந்த வராத நிலையை எப்படிக் கணக்கிடத் திட்டமிடுகிறீர்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரையும், தமிழக முதல்வரையும் கேள்வி எழுப்பியுள்ளார்.