பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது.. பாஜக தலைவர்கள் கண்டனம்.!

zxddgchdf

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதையடுத்து, தமிழக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த எஸ்.ஜி.சூர்யா 

தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். ட்விட்டர் சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படும் அவர், தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பதிவு செய்து வருகிறார்.

என்ன செய்தார்

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்’ என பதிவிட்டிருந்தார்.

கைது

இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், நேற்று ஜூன் 16-ம் தேதி இரவு சரியாக 11.15 மணிக்கு சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த அவரை காக்கி உடை அணியாமல் வந்த மதுரை போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதை அறிந்த அவரின் ஆதரவாளர்கள் சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையரகம் அலுவலகம் வெளியே எதற்காக அவரை கைது செய்தீர்கள்? யார் அவரை கைது செய்தார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

பாஜக தலைவர்கள் கண்டனம்

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதையடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அண்ணாமலை கண்டனம்

"தமிழக பாஜக மாநிலச் செயலாளர் திரு எஸ்.ஜி.சூர்யா அவர்கள் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள். 

விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது. 

கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை அறிவாலய அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு. பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார். 

ஹெச்.ராஜா கண்டனம்

மேலும், மதுரை MP-யின் செயலின்மையை  சுட்டிக்காட்டிய மாநிலச் செயலாளர் திரு. SG சூர்யாவை தமிழக சர்வாதிகார அரசின் செயல் அரசியல் பழிவாங்கும் செயலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

வானதி சீனிவாசன் கண்டனம்

மேலும், 'கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம்' என்று எஸ்.ஜி. சூர்யாவை கைது செய்ததற்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"பாஜக மாநிலச் செயலாளர் தம்பி எஸ்.ஜி. சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஊழல் வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த பிறகு, திமுக அரசு, என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு பதற்றத்தில் உள்ளது.

1972-ம் ஆண்டில் எம்ஜிஆர் அவர்கள் அதிமுகவை தொடங்கியபோது ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக இப்படிதான் கோரத்தாண்டவம் ஆடியது. ஆனால், கடைசியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எம்ஜிஆர் அவர்கள் உயிரோடு இருக்கும் முதலமைச்சர் பதவி பற்றி திமுகவினரால் கனவு கூட காண முடியவில்லை.
 
திமுகவினர் எப்போதுமே ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை பற்றி வகுப்பெடுப்பார்கள். ஆனால், எல்லாம் மற்றவர்களுக்குதான். அதிகாரம் கைக்கு வந்தால் திமுகவினர் சர்வாதிகாரிகளாக மாறி விடுவார்கள். அதுதான் இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திமுக மற்றும் அதன் சர்வாதிகார செயல்பாடுகளை ஜனநாயக முறையில் விமர்சித்ததற்காக தம்பி எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டிருக்கிறார். எந்தவொரு அடக்குமுறைக்கும் பாஜக தொண்டர்கள் அஞ்ச மாட்டார்கள். 

இரு வாரங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் உள்ளிட்ட சிலரது டிவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கிய போது, முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், "கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெறிப்பது அல்ல" என்றார். இதையே அவருக்கு மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

நாராயணன் திருப்பதி கண்டனம்

தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கைது என்ற பெயரில் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக தெரிகிறது. செந்தில் பாலாஜி என்ன சாதாரமானவரா? ஓடிப் போய் விடுவாரா? Crpc 41ஏ ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டதா? என்றெல்லாம் கேட்டவர்கள், உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் படி சூர்யாவின் Crpc 41ஏ ன் கீழ் அறிவிக்கை அளித்து விசாரணை செய்யாமல், சட்ட விரோதமாக கைது செய்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.